தஞ்சாவூரில் ஊர்க்காவல்படை மாநில விளையாட்டுப் போட்டி நகர்வல ஓட்டப் பந்தயம்
நகர்வல ஓட்டப் பந்தயம்
தஞ்சாவூர், ஆக. 22- ஊர்க்காவல் படை மாநில விளையாட்டு போட்டியையொட்டி, தஞ்சையில் 16 கி.மீ. தூர நகர்வல ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஊர்க்காவல்படை சார்பில், சோழா–2024, 29 ஆவது விளையாட்டுப் போட்டிகள் தஞ்சை மாவட்டத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மைதானத்தில் இந்த போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆக.24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகின்றன. இதில் தடகளம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், தனித்திறன் போட்டிகளான மீட்புப் பணி, முதலுதவி அளித்தல், அணிவகுப்பு, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1,320 ஊர்க்கா வல்படை வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டிகளில் தொடக்கத்தின் அங்கமாக 16 கிலோமீட்டர் நகர்வல ஓட்டப்பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சையை அடுத்த பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தொடங்கி அன்னை சத்யா விளையாட்டு அரங்கை வந்தடைந்து, மீண்டும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தைச் சென்றடைந்தது. போட்டியை தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தச்சன்குறிச்சி பயரிங் ரேஞ்சில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியையும் தொடங்கி வைத்தார். 16 கிலோமீட்டர் நகர்வல ஓட்டப்பந்தயத்தில் திண்டுக்கல் சரகத்தைச் சேர்ந்த சூர்யா முதலிடமும், விக்ரம் 2 ஆம் இடமும், சேலம் சரகத்தைச் சேர்ந்த மணியரசன் 3 ஆம் இடமும் பிடித்தனர். நிகழ்ச்சியில் தஞ்சை சரக ஊர்க்கா வல்படை தளபதி முகமது இர்ஷாத், தஞ்சை மண்டல தளபதி ரமேஷ்பாபு மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.