பட்டியல் சாதி, பழங்குடியினர் வழக்குகளில் முதற்கட்ட விசாரணை இல்லாமல் எப்ஐஆர் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 25 - பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பான ஒவ் வொரு புகாரையும் முதற்கட்ட விசாரணை இல்லாமல், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், துணை காவல் கண்காணிப் பாளர் பதவிக்குக் குறையாத அதிகாரிகள் மட்டுமே இத்தகைய வழக்குகளில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இறுதி அறிக்கையை 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த முனிராஜ் என்ற பட்டியல் சாதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பாக இந்த உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. மனுதாரர் 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் நில உச்சவரம்பு திட்டத் தின் கீழ் வழங்கப்பட்ட 2.90 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வைத்துள்ளார். அவரது நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் சிலர் அவரது சொத்தில் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்ததாகவும், கடந்தாண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி அவரை மிரட்டி சாதி அடிப்படையிலான அவதூறுகளை பயன் படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஆகஸ்ட் 7ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்த போதிலும், காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்காததால் அவர் கிருஷ்ணகிரி ஓசூர் நீதித் துறை நடுவரை அணுகினார். நீதித்துறை நடுவர் பிப்ரவரி 24 ஆம் தேதி காவல்துறையினரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தி எப்ஐஆர் பதிவு செய்யுமாறு உத்தர விட்டார். ஆனால் காவல்துறையினர் எந்த முதன்மை ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்தனர். இந்நிலையில் உயர் நீதிமன்றம் எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் பிரிவு 18ஏ(1) (எ)இன் படி கைது செய்யக்கூடிய குற்றங்களுக்கு முதற்கட்ட விசாரணை தேவையில்லை என்று தெளிவுபடுத்தியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மேற்கோள் காட்டி, எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தின் கீழ் எப்ஐஆர்களை உடனடியாக பதிவு செய்வது கட்டாயம் என்று வலியுறுத்தியது. மேலும், இதுகுறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் அனை வருக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் காவல்துறை தலை வருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். குறிப்பாக, நீதித்துறை நடுவரின் உத்தரவை ரத்து செய்து, காவல் கண்காணிப்பாளரிடம் இரண்டு வாரங்களுக்குள் எப்ஐஆர் பதிவு செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி விதிகளில் விதி 7இன்படி துணை காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இறுதி அறிக்கையை 60 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளி சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு மூர்த்தி ஆஜரானார்.