கடலூர் மாவட்டத்தில் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடலூர், அக்.21- கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான முதல் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் , தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மிதமான மழை முதல் கனமழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாயன்று அதிகாலை முதலில் பரவலாக மழை பெய்து வருகிறது இதில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி முடிந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மழையால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
