இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றிச்சென்ற கப்பலை போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்திய கிரீஸ் தொழிலாளர்கள்!
ஏதென்ஸ், ஜூலை 16 - கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரின் பைரேயஸ் துறைமுகத்தில் இருந்து ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த ‘எவர் கோல்டன்’ என்ற கப்பலை துறைமுக தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தின் மூலமாக தடுத்து நிறுத்தியுள்ளனர். காசாவில் இனப்படுகொலையை தீவிரப்படுத்தி யுள்ள இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமிக்கும் வேகத்தையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களுக்கான பொருட்களைக் கொண்டு செல்வதற்கு உடந்தையாக உள்ள துறைமுகத்தின் பங்களிப்புக்கு எதிராக, ராணுவப் பொருட்களை ஏற்றவோ இறக்கவோ மாட்டோம் என ஏதென்ஸ் நகரில் தொழிலாளர்கள், இளைஞர் அமைப்புகள், தொழிற்சங்கங்களுடன் மக்களும் இணைந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்கங்கள், இளைஞர்களின் போராட்டத்தின் காரணமாக, அந்த ஆயுதங்கள் ‘எவர் கோல்டன்’ கப்பலில் இருந்து ‘கோஸ்கோ ஷிப்பிங் பிசஸ்’ என்ற கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. எனவே, அந்தக் கப்பலிலும் சரக்குகளை ஏற்றவும் மாட்டோம் இறக்கவும் மாட்டோம் என உடனடியாக புதிய போராட்டத்திற்கு தொழிலாளர்கள் அழைப்பு விடுத்தனர். மேலும் போக்குவரத்து மற்றும் சரக்கு சேவைத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களும் இத்தகைய சரக்குகளைக் கையாளும் பணியில் பங்கேற்க வேண்டாம் என வலியுறுத்தினர். கோஸ்கோ ஷிப்பிங் பிசஸ் கப்பலில் இருந்து ஆயுதங்களை கையாள்வதன் மூலம் துறைமுகத் தொழிலாளர்கள் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டார்கள் என அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த கொடிய ஆயுதங்களை இறக்கி வைப்பதையும், அதன் பரிமாற்றத்தை தடுத்து நிறுத்துவதுமே எங்கள் இலக்கு. ஆயுதமற்ற மக்களுக்கு எதிராகப் போருக்கான கருவியாகவும் அந்த இனப்படுகொலைக்கு உதவுகிற நபர்களாக இந்தத் துறைமுகம் நம்மை மாற்றுவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. இந்த துறைமுகத்தின் வழியாக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்ட போது ஏற்கனவே துறைமுக தொழிலாளர்கள் இதேபோன்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தற்போது துறை முக தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பிற தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், பொது மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.