அரசு போக்குவரத்து ஊழியர்கள் 5 ஆவது நாளாக போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக. 22- பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 23 மாதகால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன திருச்சி - கரூர் மண்டலங்கள் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி புறநகர் கிளை முன்பு, தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தின் 5 ஆவது நாளான வெள்ளியன்று நடந்த அரை நிர்வாண போராட்டத்திற்கு திருச்சி மண்டல மத்திய சங்க செயலாளர் பக்ருதீன் அலி அகமது தலைமை தாங்கினார். திருச்சி, கரூர் மண்டலத் தலைவர் சிங்கராயர் துவக்க உரையாற்றினார். போராட்டத்தை விளக்கி டி.என்.எஸ்.டி.சி திருச்சி, கரூர் மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம், எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவர் அருள் தாஸ், எஸ்.சி.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் ராமதாஸ், சண்முகம், ஜெயராமன், டி.என்.எஸ்.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் கருணாநிதி, சிவானந்தம் ஆகியோர் பேசினர். கும்பகோணம் கும்பகோணம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்கள் நான்கு நாட்களாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் படும் சிரமங்களை கலைநிகழ்ச்சியாக மாற்றி, அரசுக்கு இசை கருவிகளை வைத்து பாடல் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர்.