போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்
சிஐடியு தஞ்சாவூர் மாவட்ட மாநாடு கோரிக்கை
தஞ்சாவூர், செப். 8- இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தஞ்சை மாவட்ட 16 ஆவது மாநாடு செப்டம்பர் 6, 7 (சனி, ஞாயிறு) ஆகிய இரு தினங்கள் தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா நான்சி மஹாலில் நடைபெற்றது. முதல்நாள் சனிக்கிழமை மாலை, சிவகங்கை பூங்காவிலிருந்து பேரணி புறப்பட்டு, பனகல் கட்டிடம் அருகில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் தோழர்கள் என்.சங்கரய்யா, வி.எஸ். அச்சுதானந்தன் நினைவுத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு செயலாளர் து. கோவிந்தராஜு வரவேற்றார். சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன், மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், வரவேற்புக்குழு துணைத் தலைவர் சின்னை.பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டத் தலைவர் ம.கண்ணன், வரவேற்புக்குழு தலைவர் எஸ்.செல்வராஜ், துணைத் தலைவர்கள் என்.குருசாமி, எம்.வடிவேலன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.அன்பு, சா.செங்குட்டுவன், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வரவேற்புக்குழு பொருளாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார் நன்றி கூறினார். பிரதிநிதிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ம.கண்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் என்.பி. நாகேந்திரன் கொடியேற்றினார். வரவேற்புக்குழு தலைவர் எஸ்.செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கே.வீரையன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் வேலை, ஸ்தாபன அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார் வரவு - செலவு அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். வாசு ஆகியோர் வாழ்த்திப் பேசினார். நிர்வாகிகள் தேர்வு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளராக ம.கண்ணன், தலைவராக சி.ஜெயபால், பொருளாளராக பி.என். பேர்நீதி ஆழ்வார் மற்றும் 21 நிர்வாகிகளை உள்ளடக்கிய 45 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் புதிய பென்சன் திட்டத்தை திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்ற போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலையாட்டி பொம்மை, பட்டு, கைத்தறி நெசவுத்தொழில், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு பட்டறை, கும்பகோணம் எவர்சில்வர், பித்தளை பாத்திரம், சுவாமிமலை சிற்பக்கலை உள்ளிட்ட பாரம்பரிய கைத்தொழில்களுக்கு ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விலக்கு அறிவிக்க வேண்டும். கட்டுமான முறைசாரா தொழிலாளர்களின் நலவாரிய பணப் பயன்களை உயர்த்தி வழங்கிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் பென்ஷன் வழங்கிட வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.