குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்திடுக! வீட்டு வேலை தொழிலாளர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஆக. 24 - குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை மற்றும் புறநகர் வீட்டு வேலை தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 3ஆம் ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஆக.24) புரசைவாக்கத்தில் நடைபெற்றது. பேரவையில், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களை கணக்கெடுப்பு செய்து வீடற்றவர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தனி செயலியை உருவாக்கி பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், கட்டுமான வாரியத்தைப் போன்று நலவாரிய பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் வி.செங்கேணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டி.சுகுமார் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை துணைத் தலைவர் நளினி வாசித்தார். சிஐடியு மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எம்.தயாளன் பேரவையை துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் பி.சுந்தரமும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஆர்.உஷாரணியும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ் நிறைவுரையற்றினார், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சுமதி நன்றி கூறினார். 13 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலைவராக வி.செங்கேணி, செயலாளராக பி. சுந்தரம், பொருளாளராக ஆர்.உஷாராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.