tamilnadu

img

வியூகம் வகுப்போம்! - கற்பனை : ராஜகுரு

ஐந்து மாநிலத் தேர்தல்கள் நெருங்குகின்றன. தேர்தலில் எப்படியும் வென்றே ஆகவேண்டும் என்ற இலக்குடன்  யோகி ஆதித்யநாத், இபிஸ், ஓபிஎஸ், அண்ணாமலை ஆகிய நால்வரும் புதுதில்லி சென்று தேர்தல் வியூகம் வகுப்பதில் கில்லாடியான அமித் ஷாவைச் சந்திக்கின்றனர்.

யோகி : நமஸ்தே அமித் ஷா ஜீ... உங்களைப் பாத்துப் பேசத்தான் வந்திருக்கோம். 
ஷா : ஆயியே, ஆயியே.. பேசலாம் வாங்க ! அண்ணாமலை : மோடிஜீ நம்மை இப்படி ஏமாத்துவார்னு நான் நினைக்கவே இல்லை.இபிஸ் (வாய் பொத்தியபடி குரலைத் தாழ்த்தியபடி): நெறய விஷயத்தில ஏமாத்துவாரே? நீங்க எதைச்  சொல்றீங்க?

அண்ணாமலை : திடீர்னு சொல்லாம கொள்ளாம எதையாவது அறிவிப்பார் இல்லியா.. அது மாதிரி மூணு விவசாயிகள் சட்டங்களையும் விலக்கிக்கறேன்னு அறிவிச்சுட்டாரே, அதைத்தான் சொல்றேன். “ஆர்ப்பாட்டங்களுக்குப் பயந்துபோயி சட்டங்களை விலக்கிக்க நாங்க ஒண்ணும் காங்கிரஸ் சர்க்கார் கிடையாது, இது 56 இன்ச் மார்பு மோடிஜீயின் சர்க்கார். சட்டத்திலே ஒரு கமா, புள்ளி கூட மாத்த மாட்டோம்”னு நான் பேசிக்கிட்டே இருக்கேன்.. வானதி எனக்கு சைகை காட்டறாங்க.. அப்பறம்தான் தெரிஞ்சுது சட்டங்களை விலக்கிக்கிட்டார்னு !

அமித் ஷா : என்ன இருந்தாலும் தேர்தல்ல நாம ஜெயிக்கணுமே... எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்.. 
யோகி : கரெக்ட் ! அயோத்தியில பாபர் மசூதியை நாம இடிச்சப்ப எவ்வளவு பேர் திட்டினாங்க? அரசையே டிஸ்மிஸ் பண்ணாங்க.. கோர்ட்டுக்குப் போனாங்க.. ஆனா இப்ப நான் என்ன அறிக்கை விடறேன்.. மசூதியை இடிச்ச அதே இடத்தில ராமர் கோயில் கட்டற துணிச்சல் பிஜேபியைத் தவிர வேற எந்தக் கட்சிக்கும் வராதுன்னு அறிக்கை விடறேன். அந்த இடத்திலே நம்மைத் தவிர வேற யார் கோயில் கட்டப் போறாங்க-?

அமித் ஷா : “விவசாயிகளோட வேற எந்தக் கோரிக்கையையும் ஏத்துக்காம நான் இன்னும் அதே மோடிதான்.. மாறவேயில்லை”ன்னு காண்பிச்சுட்டாரே.. !
    நாடாளுமன்றத்திலே எதிர்க்கட்சிகள் சுதந்திரமா கருத்து சொல்லலாம்னு ஒரு பக்கம் அவர் சொல்வாரு.. ஆனா அப்படி யாராவதுபேசினா சஸ்பெண்ட் பண்ணிடறோம்.. நாம வித்தியாசமான கட்சிங்கறதை ஒவ்வொரு விஷயத்திலயும் நிரூபிச்சுட்டே வரோமே..

யோகி : ஒரே குடும்பத்தைச் சுத்தி வர்ற கட்சியில்ல பாஜகன்னு மோடிஜீ அறிக்கை விடறாரு.. ஒரே ஊரைச் சுத்தி வர்ற கட்சிதான் பாஜகங்கறதை மறைச்சுடறோம் பாருங்க.. அதுதான் நம்ம சாமர்த்தியம் !
அண்ணாமலை : நாக்பூரைத்தான் சொல்றீங்கன்னு தெரியாம இபிஎஸ்ஸும் ஓபிஸ்ஸும் முழிக்கறாங்க பாருங்க.. 

யோகி : அதெல்லாம் முழுசாத் தெரிஞ்சா நாம சொன்னதைக் கேட்டுக்கிட்டு, நம்ம கூட இருப்பாங்களா? இப்ப பெட்ரோல், டீசல், காஸ் விலையெல்லாம் குறைக்கணும்னு எதிர்க்கட்சிகள்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணிப் பார்த்தாங்க.. ஆனா நாம குறைக்கலியே? தேர்தல் முடிவுகள் ஒரு மாதிரி வந்ததும் லேசாக் குறைக்கறமாதிரி குறைச்சுட்டு, எல்லா மாநிலங்களும் வரியைக் குறைக்கணும்னு பந்தைத் திருப்பி அடிச்சுட்டோம்ல? 
அண்ணாமலை : ஸ்டாலினுக்கு எதிரா ஆர்ப்பாட்டம் பண்ண காரணம் தேடிட்டிருக்கற எனக்கு அது ரொம்ப வசதியாப் போச்சு..  

அமித் ஷா : மோடிஜீ இஸ்ரேல்லயும் பிரபலமாத்தான்  இருக்காரு.. பேசாம எங்க யமினா கட்சியிலே வந்து சேர்ந்து எங்களுக்குக் கேன்வாஸ் பண்ணுங்கன்னு இஸ்ரேல் பிரதமர் அவரைக் கேட்டிருக்காரு..

அண்ணாமலை : உடனே இங்கேயுள்ள எதிர்க்கட்சிகள்லாம் “பஹுத் அச்சா.. அவரை இஸ்ரேலுக்குக் கூட்டிட்டுப் போயி சிட்டிசன்ஷிப் குடுத்து அங்கேயே வச்சுக்கிட்டீங்கன்னா ரொம்ப நல்லது.. இந்தியா பொழைச்சுக்கும்”னு அறிக்கை விடறாங்க. என்ன திமிர் பாருங்க !

அமித் ஷா : நாம எதிர்க்கட்சியா இருக்கும்போது பேசாத பேச்சா.. வுடுங்க. கிளாஸ்கோ மாநாட்டிலே 2070-க்குள்ள  ஜீரோ எமிஷனுக்குப் போயிடுவோம்னு பேசி, நம்ம ஜீ எல்லாரையும் அசத்திட்டார்ல? 

யோகி : கிரேட்டா தன்பர்க் எல்லாத் தலைவர்கள் பேச்சையும் பிளா, பிளா, பிளா-ன்னு தள்ளிவிட்டிருச்சு. “பிளா, பிளா, பிளா-ன்னா அர்த்தமற்ற வெற்றுப் பேச்சு”ன்னு அர்த்தமாம். எனக்கென்னவோ அந்தப் பொண்ணு மறைமுகமா நம்ம ஜீயைத்தான் சொன்னுதோன்னு சந்தேகம் வந்துது.. 
(மற்றவர்கள் அதை ஆமோதிப்பது மாதிரி தலையை அசைக்கின்றனர்) 

அமித் ஷா : உஜ்வாலா திட்டத்திலே நாம சிலிண்டர் சப்ளை பண்ணா, ஜனங்க அதை எடுத்துக்காம, காடுகளுக்குப் போய் விறகு எடுத்துட்டு வந்து சமைக்கறாங்களாம்.. விளக்கேத்த கடுகு எண்ணெய் சப்ளை பண்ணா விளக்கை எரிக்காம அந்த எண்ணெய்யை எடுத்துட்டுப் போய் சமையலுக்குப் பயன்படுத்திக்கறாங்களாம். கேட்டா விலைவாசி ஒசந்துக்கிட்டே போனா, நாங்க என்ன செய்யறதுன்னு கேட்கறாங்களாம் !

யோகி : மோடிஜீதான் அதுக்குப் புதிய மந்திரம் தயார்  பண்ணி டைவர்ட் பண்ணிக்கிட்டிருக்காரே? சேவாக், சங்கல்ப், அவுர் சம்பாரன்.. அதாவது சேவை, உறுதி. அர்ப்பணிப்புன்னு இபிஎஸ்-ஓபிஸ் புரிஞ்சுக்கணும்..

இபிஎஸ் : இதெல்லாம் இருக்கட்டும்.. வர்ற தேர்தல்ல நாம ஜெயிச்சாகணுமே.. இல்லேன்னா எங்களைக் கொத்து பரோட்டா பண்ணிச் சாப்பிட்டுருவாங்க,, அதுக்கு ஒரு வழி சொல்லுங்க,,

அமித் ஷா : ஒண்ணும் கவலைப்படாதீங்கய்யா.. நமக்கு வழி காட்ட நாக்பூர்  இருக்கவே இருக்கு. நாம ஊடுருவாத இடமே கிடையாது. எல்லா ஜாதியிலயும் நமக்கு ஆள் இருக்காங்க,, எல்லா மதத்திலேயும் நமக்கு ஆள் இருக்காங்க.. தேர்தல் நேரத்திலே பாகிஸ்தானோட சண்டை, சீனாவோட மோதல்னு எதையாவது கிளப்பிவிட்டு ஓட்டு வாங்கிக்கலாம். நாம நேரடியா வாங்க முடியாத இடத்திலே ஓட்டு வாங்கின எம்.எல்.ஏ.-க்களையோ எம்பி-க்களையோ விலைக்கு வாங்கிக்கலாம். நமக்குத்தான் அவங்க மார்க்கெட்லே கிடைக்கறாங்களே ! நமக்கு அள்ளித்தர கார்ப்பரேட் நண்பர்கள் இருக்காங்க.. தேர்தல் பத்திரங்கள் மூலமா அவங்க நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.. உலகத்திலே சிறந்த தலைவர் மோடிஜீதான்னு பிம்பத்தை மெயின்டைன் பண்ணுவோம். போலிச் செய்திகளைப் பரப்ப நம்மகிட்ட ஐ.டி. விங் இருக்கு. கவலைப்படாம போய்ட்டு வாங்க..

(அனைவருக்கும் கைகைகூப்பி விடையளிக்கிறார் அமித் ஷா. அவரது பேச்சில் முழு நம்பிக்கை வராமலேயே மற்றவர்கள் அரை மனதுடன் கலைகின்றனர்.

ஆதித்யநாத்தை மட்டும் இருக்குமாறு சைகை காட்டுகிறார் ஷா)

;