பிப்ரவரி 12: தேசத்தை ஸ்தம்பிக்க வைப்போம்!மோடி அரசுக்கு எதிராகப் பொது வேலைநிறுத்த அறைகூவல் விடுத்தது சிஐடியு மாநாடு
விசாகப்பட்டினம், ஜன. 01 - ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக இறுதிப் போரைத் தொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று சிஐடியு அகில இந்திய மாநாடு அறிவித்துள்ளது. இதனைப் பறை சாற்றும் வகையில், வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ‘அகில இந்தியப் பொது வேலைநிறுத்தத்தை’ வெற்றி பெறச் செய்வோம் என்றும் சிஐடியு 18-ஆவது அகில இந்திய மாநாடு உறுதியேற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் மாநாட்டின் இரண்டாம் நாளான வியாழனன்று, பொதுச்செயலாளர் தபன்சென் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை விளக்கிப் பேசினார். உரிமைப் போராக மாறவுள்ள பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தம் மோடி அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடி யாகத் திரும்பப் பெற வேண்டும், இந்திய உழைக்கும் மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இது குறித்துப் பேசிய தபன்சென், “இந்த வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டு விருப்பத்தின் வெளிப்பாடு; நமது உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக விழு மியங்களைக் காக்கத் தொடுக்கப் படும் அறப்போர்” என்று முழங்கி னார். இந்த வேலைநிறுத்தப் போராட்டத் திற்கு சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் (SKM) தனது முழு ஆதரவை வழங்கி யுள்ளது, தொழிலாளர் மற்றும் விவ சாயி வர்க்கத்தின் இந்த மகத்தான ஒற்று மை ஆட்சியாளர்களின் அஸ்திவா ரத்தை ஆட்டம் காணச் செய்யும் என்று அவர் எச்சரித்தார். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டச் சிதைவு: ஒரு ‘தேசியக் குற்றம்’ இரண்டாம் நாள் மாநாட்டின் பிரதிநிதிகள் அமர்வில், கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமான மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை (MGNREGA) சிதைக்கும் ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து ஒரு கண்டனத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர் சிங் தாக்கூர் முன்மொழிய, அமர்நாத் குர்ம் கலா வழிமொழிய இந்தத் தீர்மானம் கொண்டுவரப் பட்டது. இத்திட்டத்தின் சட்டப்பூர்வத் தன்மையை நீர்த்துப்போகச் செய்யும் புதிய ‘விபி ஜி ராம் ஜி’ (VB G RAM G Act 2025) சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய தபன்சென், “ஏழை மக்கள் நிலப்பிரபுக்களின் பண்ணைகளில் வேலை செய்தால் மட்டுமே கூலி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனை, உழைக்கும் மக்களை மீண்டும் அடிமை முறைக்குத் தள்ளும் சதியாகும்” என்று சாடினார். மேலும், இத்திட்டத்திற்கான 40 சதவீத நிதிச் சுமையை மாநிலங்கள் மீது சுமத்து வது கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் ‘நிர்வாகக் குற்றம்’ என்றும் அவர் எச்சரித்தார். பாலஸ்தீன ஆதரவு மற்றும் அணுசக்தி இறையாண்மை மாநாட்டின் உணர்ச்சிப்பூர்வமான ஒரு பகுதியாக, காசா மற்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையைக் கண்டி த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மெர்சிகுட்டி அம்மா முன்மொழிய, எம். எச்.ஷேக் வழிமொழிந்த இத்தீர்மானத்தின் போது, பிரதிநிதிகள் அனைவரும் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தித் தங்களின் சர்வதேச ஒருமைப் பாட்டை வெளிப்படுத்தினர். அதே போல், இந்தியாவின் அணு சக்தி இறையாண்மையை அமெரிக்கா விற்குத் தாரைவார்க்கும் ‘சாந்தி சட்டத்தை’ (Shanti Act) எதிர்த்து எம்.சாய்பாபு மற்றும் பி.எஸ்.ராணா ஆகியோர் முன்மொழிந்த தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வலுவடையும் வர்க்க ஒற்றுமை: தலைவர்களின் வாழ்த்துரை மாநாட்டின் இரண்டாம் நாளில், பல்வேறு வெகுஜன அமைப்புகளின் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்று ஆற்றிய வாழ்த்துரைகள், தொழிலாளர் மற்றும் விவசாயி வர்க்கத் தின் ஒருங்கிணைந்த போராட்டத் திற்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) பொதுச்செயலாளர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் (AIAWU) பொதுச்செயலாளர் பி.வெங்கட், டிஒய்எப்ஐ (DYFI) பொதுச்செயலாளர் ஹிமக்னோராஜ் பட்டாச்சார்யா மற்றும் எஸ்எப்ஐ (SFI) தலைவர் ஆதர்ஷ் எம். சஜி ஆகியோர் பங்கேற்று, பிப்ர வரி 12 வேலைநிறுத்தத்தை வெற்றி யாக்கத் தங்களின் முழு ஆதரவை அறிவித்தனர். செய்தியாளர் சந்திப்பின் போது, விசாகப்பட்டினம் உருக்காலையைத் தனியார்மயமாக்கும் முயற்சியை முறியடித்து கடந்த 5 ஆண்டுகளாகத் தொழிலாளர்கள் நடத்திவரும் வீரம் செறிந்த போராட்டத்தை தபன்சென் வெகுவாகப் பாராட்டினார். பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தத்தை நோக்கித் தேசத்தைத் திரட்டும் மாபெரும் வர்க்கப் போராட்டக் களமாக சிஐடியு மாநாடு உருவெடுத்துள்ளது.
