அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து முழு விலக்கு அளித்திட வேண்டும்
திருச்சி மாவட்ட பருப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, செப். 8- திருச்சி மாவட்ட பருப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பேரவைக் கூட்டம் திருச்சியில் சங்கத்தின் தலைவர் எம்.தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் எஸ்.எம். சங்கரன் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். செயலாளர் டி.டி.கே. கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். சங்கத்தின் தலைவர் எம். தங்கராஜ், சங்கத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். துணைத் தலைவர்கள் கே.டி. தனபால், என்.ஜெ. செந்தில் வேலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பொருளாளர் வி.ரவீந்திரன் நன்றி கூறினார். கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் குறிப்பாக அரிசி, பருப்பு போன்ற முக்கியப் பொருட்கள் அனைத்திற்கும் ஜி.எஸ்.டி வரியிலிருந்து முழு வரி விலக்கு அளித்திட ஒன்றிய-மாநில அரசுகளை கேட்டுக் கொள்வது. கொரோனாவுக்குப் பிறகு தொழில் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி தொழில் உரிமம் புதுப்பிக்கும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.