tamilnadu

img

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஓய்வு

கிரிக்கெட் உலகின் பிரபல சுழற்பந்துவீச்சாளரும், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவருமான ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  “கடந்த 23 வருடங்களாக என்னுடைய கிரிக்கெட் பயணத்தை அழகாகவும் நல்ல நினைவுகளாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி” எனத் தனது ஓய்வு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.   இந்திய தேசிய அணிக்காக 1998-ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வரும்  ஹர்பஜன் 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக டெஸ்ட் போட்டியில் 417 விக்கெட்டுகளும், ஒருநாள் 269 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.  பேட்டிங்கில் சுமாராக செயல்படக்கூடியவர் என்றாலும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான பேட்டிங் செய்து அசத்தியவர். 163  ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய பொழுது தமிழ் மொழியை போற்றி புகழ்ந்ததால் தமிழ்நாடு ரசிகர்கள் ஹர்பஜன் சிங்கை “கிரிக்கெட்டின் தமிழ் புலவர்” என அழைக்கின்றனர். மும்பை, கொல்கத்தா ஆகிய அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஒரு சீசனில் மும்பை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். கிரிக்கெட் மட்டுமின்றி தமிழில் “பிரண்ட்ஷிப்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், நடிகை லாஸ்லியா நடித்துள்ளனர். ஹர்பஜன் சிங்கிற்கு கீதா பஸ்ரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதில் கீதா பஸ்ரா நடிகையாவார்.

காலுக்குள் சுழலும் பம்பரம் 

ஹர்பஜன் வீசும் சுழற்பந்துவீச்சு சற்று வித்தியாசமானது. அதாவது பெரும்பாலும் பேட்டர்களின் காலுக்குள் புகுந்து ஸ்டெம்ப் பகுதிக்கு செல்லும். இதை கணிப்பது மிக கடினம். தான் வீசும் 6 பந்துகளில் 4 பந்தை காலுக்குள் இறக்கிவிட்டு திணறடிப்பார். குறிப்பாக ஹர்பஜன் வீசும் சுழற்பந்துவீச்சு சற்று வேகத்தில் தான் ரிலீஸ் ஆகும். பந்துவீசும் முன் கை சுழற்றும் முறையும் வேறு மாதிரியாக இருப்பதால் பேட்டர்கள் பந்தை பார்ப்பதா? கையை பார்ப்பதா? காலுக்குள் நுழையும் பந்தை கவனிப்பதா? என இடியாப்ப சிக்கலில் மாட்டி விரைவில் ஆட்டமிழப்பார்கள். 

ரிக்கி பாண்டிங்கின் வில்லன் 

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும், அதிரடி பேட்டருமான ரிக்கி பாண்டிங்கின் முக்கியமான வில்லன் ஹர்பஜன் தான். அனைத்து நாட்டு வீரர்களின் பந்தை விளாசும் திறமையுடைய பாண்டிங் ஹர்பஜன் பந்தில் கடுமையாக திணறுவார். இதனால் பாண்டிங் களத்தில் இறங்கினால் இந்திய கேப்டன்கள் ஹர்பஜனை தான் முதலில் பார்ப்பார்கள். நிறைய முறை முக்கியமான கட்டத்தில் பாண்டிங்கை பெவிலியனுக்கு அனுப்பிய சாதனையும் ஹர்பஜனிடம் உள்ளது. அந்தளவுக்கு எலியும், புனையுமாக கிரிக்கெட் விளையாட்டில் சுவாரஸ்யத்தை கொண்டுவந்தனர்.  

 

;