மதனாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதிகோரி சிபிஎம் மனு
திருப்பத்தூர், ஜூலை 2 - மதனாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலு வலரிடம் சிபிஎம் கோரிக்கை மனு திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், மதனாஞ்சேரி ஊராட்சியில் ஆதி திராவிடர் மற்றும் அருந்ததியர் இன மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இம்மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவு நீர் கால்வாய் முழுமையாக கட்டப்பட வில்லை, சில இடங்களில் கழிவுகள் அகற்றப்படாததால் துர்நாற்றத்துடன் புழுக்கள் நெளிந்து காணப்படுகிறது.இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நீரை சேமிப்பதற்கு சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்படவில்லை. இதனால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மதனாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் சிபிஎம் சார்பில் தாலுகா செயலாளர் ஏ.பிச்சைமுத்து மனு அளித்தார். அம்மனுவில் கழிவுநீர் கால்வாய்களை முறையாக கட்டித் தர வேண்டும், தினந்தோறும் கால்வாயில் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பாது காக்கப்பட்டகுடிநீர் கிடைக்க சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தர வேண்டும், மதனாஞ்சேரி ஊராட்சியில் 100 நாள் வேலையை துவக்கி விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். இச்சந்திப்பின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், மாவட்ட குழு உறுப்பினர் எம்.இந்துமதி, தாலுகா குழு உறுப்பினர்கள் ராஜா, ராஜேந்திரன், சரளா, மயிலம்மாள், ஆலங்காயம் குபேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.