பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், அக். 13- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பாபநாசம், அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 193 விவசாயிகள் 44.53 மெட்ரிக் டன் அளவு பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 வணிகர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு அதிகபட்சம் ரூ.7,399, குறைந்தபட்சம் ரூ.6,229, சராசரி ரூ.6,596 என விலை நிர்ணயித்தனர். பருத்தி ரூ.29.58 லட்சத்திற்கு விற்பனையானது.
காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
பெரம்பலூர், அக். 13- பெரம்பலூர் நகரில் ஆயுதப்படை காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். பெரம்பலூர் நான்குரோடு அருகே உள்ள முத்துலட்சுமி நகரில் வசித்து வருபவர் பிரசாந்த் (32). இவர், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான களரம்பட்டி கிராமத்திற்குச் சென்று விட்டு, இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் நகை, டைமண்ட் நெக்லஸ், டைமண்ட் தோடு மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.23 லட்சம் என கூறப்படுகிறது. தகவலறிந்த பெரம்பலூர் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா, டிஎஸ்பி ஆரோக்கியராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாட்டுக்கு தீவனம் வைக்கச் சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி பலி
தஞ்சாவூர், அக். 13- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, மாடுகளுக்கு தீவனம் வைக்கச் சென்ற முதியவர், மின்சாரம் தாக்கி பலியானார். சனிக்கிழமை இரவு ஒரத்தநாடு அருகே மூர்த்திஅம்பாள்புரம், தெற்குக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(64) என்பவர், தனது வீட்டு பின்புறம் தகரத்தால் அமைக்கப்பட்டு இருந்த மாட்டுக் கொட்டகையில் மாடுகளுக்கு தீவனம் வைக்கச் சென்றார். மாட்டுக் கொட்டகைக்கு வீட்டிலிருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. மழை மற்றும் பலத்த காற்றால் மாட்டுக் கொட்டகை மின் இணைப்பு அறுந்து தகரக் கொட்டகையில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல் ராஜேந்திரன் மாட்டுக் கொட்டகையில் இருந்த இரும்பு கம்பியை தொட்டபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ஒரத்தநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ராஜேந்திரன் உடலை, மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை, அக். 13- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல் கோரி 24, மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 8 மனுக்களும், ஆக்கிரமணம் அகற்ற கோரி 15, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகைகோரி 22 மனுக்களும், பல்வேறு புகார்கள் தொடர்பாக மனுக்கள் 25 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர கோரிக்கை தொடர்பான மனுக்கள் 32 என மொத்தம் 250 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். பின்னர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,690 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்.