அமெரிக்காவில் மிகப்பெரிய பனிப்பிரதேசமான அலாஸ்காவில் கடந்த டிசம்பரில் (2021) பொது வாக பனிப்பொழிவு நிகழும். ஆனால் இந்த முறை இதற்கு மாறாக வெப்பநிலை சாதனை அளவில் உயர்ந்து காணப் பட்டது. பனிப்பொழிவிற்குப் பதில் வெயில் கொளுத்தியது. மழையும் பெய்தது. புவி வெப்ப உயர்வு உலகின் வடமூலை யில் இருக்கும் அலாஸ்காவையும் பாதிக்கிறது. இதனால் அங்கு மக்கள் பெரும் துயரங்களை அனுபவிக்கின்றனர்.
19.4 டிகிரி வெப்பம்
உறையவைக்கும் பனிக்காலத்தில் கோடியாக் (Kodiak) தீவுப்பகுதியில் பகல்நேர வெப்பநிலை 19.4சி/67எப் டிகிரி யாக இருந்தது. இது இந்த மாகாணத்தில் முன்பு நிலவிய உயர் வெப்பநிலையை விட 7 டிகிரி அதிகம். இந்த உயர்வெப்ப நிலை இதுவரை நிலவியதிலேயே மிக அதிகமானது என்று அலாஸ்கா காலநிலை ஆய்வுமைய விஞ்ஞானி ரிக் தோமன் (Rick Thoman) கூறியுள்ளார். இது அசாதாரணமானது. புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாடே இத்தகைய மோசமான காலநிலைக்குக் காரணம் என்று தோமன் குறிப்பிட்டுள்லார். கோடியாக் விமானநிலையத்தில் 18.3சி /65எஃப் வெப்ப நிலை நிலவியது. கோல்டுபே பகுதியில் 16.6சி வெப்பநிலை நிலவியது. இந்த உயர் வெப்பம் பல இடங்களிலும் மழைப் பொழிவிற்குக் காரணமானது. எட்டு டிசம்பர் நாட்கள் வெப்ப நிலை 10சி டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. அலூஷன் அனாஸ்கா (Aleutian Unaska) என்ற இடத்தில் இதுவரை இல்லாத உயர் அளவாக 13.3சி வெப்பநிலை கிறிஸ்துமஸ் நாளன்று நிலவியது. 1937ஆம் ஆண்டிற்குப் பிறகு ஃபேர் பாங்க்ஸ் (Fairbaanks) என்ற மத்திய அலாஸ்கா நகரில் கடும் பனிப்புயல் வீசியது. இங்கு 10-24.5 செமீ அளவு கனமான பனிமழை பெய்தது. இந்நகரில் இருந்து 153 கிமீ தூரத்தில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெல்டா ஜங்ஷன் என்ற சிறு நகரில் உள்ள இப்பிரதேசத்தின் ஒரே ஒரு கடையின் கூரை மீது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. வழக்கமாக டிசம்பரில் அலாஸ்கா வில் வறண்ட காலநிலையே காணப்படும். ஏற்கனவே குளிர்ச்சி அதிகம் நிறைந்த காற்று மேலும் ஈரப்பதத்தை பிடித்து வைத்துக்கொள்ள முடியாது என்பதே இதற்குக் காரணம்.
மோசமாகும் நிலைமை
அப்போது காற்று மென்மையானதாக இருக்கும். அந்த சமயத்தில் காற்றில் எவ்வளவு ஈரத்தன்மை அதிகமானாலும் பாதிப்பு ஏற்படாது. ஆனால், இப்போது அலாஸ்காவில் உயர் வெப்பத் திற்குப் பிறகு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்த அதே நாளில் 25 மில்லிமீட்டர் மழை பெய்தது. இது பெரும்பாலான பகுதி களில் மின் தடையை ஏற்படுத்தியது. எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சாலைகள், அலுவலகங்கள், கல்வி நிலை யங்கள் மூடப்பட்டன. இந்நிகழ்விற்கு “ஐஸ்மேகெடன்” (Icemageddon) என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டது. மழைக்குப் பிறகு பெருமளவில் ஏற்பட்ட பனிப்பொழிவி னால் பிரதேசத்தில் பல இடங்களிலும் பனி கெட்டியாக உறைந்துகிடக்கிறது. இதனால் போக்குவரத்து தடை பட்டுள்ளது. சாலைகள் போக்குவரத்திர்கு லாயக்கற்றதாகி யுள்ளது. மார்ச் ஏப்ரல் வரை இந்நிலை தொடர வாய்புள்ளது என்று முன்னெச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அலாஸ்காவின் பல பிரதேசங்களிலும் உயர் வெப்பத்து டன் அடர்ந்த பனிப்புகையும் காணப்படுகிறது. உயர்ந்த வெப்பநிலை காட்டுத்தீ ஏற்பட ஏதுவாகும் என்று அஞ்சப்படு கிறது. 2019 ஜூனில் அலாஸ்காவில் பீதி ஏற்படுத்திய காட்டுத்தீ சம்பவத்திற்கு அதிக வெப்பமே காரணமாக இருந்தது. இத்தீயில் 697,000 ஏக்கர் பரப்பு எரிந்து சாம்பலானது. இதன் மூலம் அமெரிக்காவின் 62 விழுக்காடு வனப்பகுதி அழிந்தது. அலாஸ்கா போக்குவரத்துத்துறை சாலைகள் போக்கு வரத்திற்கு பயன்படுத்தமுடியாத நிலை நீண்டகாலம் நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைப்பொழி வின்போது மழை நீர்த்துளிகளாக விழாமல் அடர்ந்த சிமெண்ட் கட்டிகள் போல எல்லா இடங்களிலும் விழுந்தது. தரைப்பரப்புடன் இது இறுக்கமாக ஒட்டிக்கொள்வதால் இதை அப்புறப்படுத்துவது மிகக்கடினம்.
என்ன நடக்கிறது அலாஸ்காவில்?
வெப்பம் உயர்ந்தாலும் சாலையில் சுழிநிலைக்கும் குறைவான வெப்பநிலையே நிலவும். இது விழுந்த பனியை மேலும் சாலையுடன் இறுக்கமாகப் பிணைக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக அலாஸ்காவில் வெப்பநிலை குளிர்காலத்திலும் அதிகரித்துவருகிறது. இது காலநிலை மாற்றத்தின் தீவிரப்போக்கையே காட்டுகிறது என்று டாமன் கூறியுள்ளார். சூடாகும் உலகில் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அலாஸ்காவின் தொலை தூர வட பகுதிகளிலும் இதே கதைதான் நடக்கிறது. இந் நிகழ்வுகள் குளிர்காலத்தில் மக்களை பெரும் துயரங்களுக்கு ஆளாக்குகிறது. இந்நிலை அங்கு வாழும் கரிபூ (Caribou), மஸ்க் ஆக்ஸென் (Musk Oxen) போன்ற விலங்குகளை உணவு தேடி வெகுதூரம் அலையவைக்கிறது. கெட்டியான பனி எல்லா இடங்களிலும் மூடியிருப்பதால் இவற்றால் எளிதாக உணவைப் பெற முடிவதில்லை.
சோதனை மேல் சோதனை
அலாஸ்காவின் ஒருபுறம் இந்த மாற்றங்கள் நிகழும் போது அந்த மாகாணத்தின் தென்பகுதிகள் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலைக் குறைவை அனுபவிக்கின்றன. தென் கிழக்கு கெச்சிகன் (Ketchikan) நகரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மைனஸ் 18சி வெப்பநிலை நிலவியது. இது கடந்த நூற்றாண்டில் மிகக்குறைந்த வெப்பநிலை. ஹவாய்த்தீவு களில் இருந்து இந்த பருவத்தில் வழக்கமாக வீசும் வெது வெதுப்பான காற்றுஅலாஸ்காவில் குளிர் மற்றும் வறண்ட காலநிலையை ஏற்படுத்தும். ஆனால் இப்போது இங்கு கடலோரப் பகுதிகளில் இருந்து வீசும் காற்று ஈரப்பதத்துடன் காணப்படுவதால் வரும் நாட்களில் அலாஸ்காவின் உட்பிரதேசங்களில் இதே போன்ற கடுமையான மழையும், பனிப்புயல்களும் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆய்விதழ் கடந்த நவம்பர் 2021இல் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் 2060 ஆண்டு தொடங்கி ஆர்க்டிக் பகுதியில் இதுபோன்ற அதிதீவிர பனிமழை மற்றும் புயல்கள் அடிக்கடி ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் ஃபேர் பாங்க்ஸ் பகுதியில் வெப்பநிலை மைனஸ் 29 டிகிரியைத் தொடும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பூமி ஒருபக்கம் சூடாகிறது. இன்னொரு பக்கம் குளிர்கிறது. உலகில் வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு கள் அதிகம் ஏற்படும். காலநிலை மாற்றம் என்பது 2021ல் உலகளாவிய ரீதியில் வாசற்படியில் வந்து நிற்கும் அச்சுறுத்த லாக மாறியுள்ளது. வரும் ஐந்து பத்து ஆண்டுகளில் அலாஸ்கா சுருங்குவது சூழல் நம் அனைவருக்கும் விடுக்கும் முன்னெச்சரிக்கை. இது தொடர்கதையானால் பூமியில் மனித வாழ்வே கேள்விக்குறியாகிவிடும்.