தர்பூசணி பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை!
நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 18- தர்பூசணி பயிரிட்டு நஷ்டமடைந்த செங்கல்பட்டு மாவட்ட விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், பயிருக்குரிய இழப்பீட்டையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம், மடையம்பாக்கம் கிராமத்தில் 36 வயதுடைய ஆர். லோகநாதன் என்ற விவசாயி, 2 ஏக்கர் தனது சொந்த நிலத்திலும், 23 ஏக்கர் குத்தகை நிலத்திலும் இந்தாண்டு தர்பூசணி பயிரிட்டுள்ளார். தர்பூசணியில் சிவப்பு கலர் ரசாயனம் செலுத்தப்படுகிறது என்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியின் வதந்தியால், ஏக்கர் ஒன்றிற்கு குத்தகையாக ரூ.25,000/- என்ற அடிப்படையில், 23 ஏக்கருக்கு ரூ.5.75 லட்சம் குத்தகை பணம் மற்றும் முதலீடாக (விதை மற்றும் சாகுபடி செலவு) ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50,000 வீதம் 25 ஏக்கருக்கு ரூ.11,50,000 என மொத்தம் 17,25,000 ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளார். தர்பூசணி விலை வீழ்ச்சியால் விற்பனை செய்ய முடியாமல், முதலீடு செய்ய வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், மனமுடைந்த விவசாயி வேறு வழியின்றி 07.07.2025 அன்று பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீட்டையும், பாதிக்கப்பட்ட விவசாயி பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.