tamilnadu

3 பேருக்கு சாகும் வரை சிறை 4 பேருக்கு ஆயுள்

3 பேருக்கு  சாகும் வரை சிறை  4 பேருக்கு ஆயுள்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு

கோவை, ஜூலை 18 - மாணவி ஒருவர் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளியன்று தீர்ப்பளித்தது.  கோவை சீரநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா நகர் பகுதியில் 2019 ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, தனது காதலனுடன் இருந்த போது, மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய 7 பேர் கொண்ட கும்பல் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது. இச்சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் பாட்டி அளித்த புகாரின் அடிப்படையில், கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்கு ஆரம்பத்தில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, பின்னர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது. நீதிபதி பகவதியம்மாள் தலைமையில் நடந்த விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர் தடயவியல் அறிக்கைகள், மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களை சமர்ப்பித்தார். பல மாதங்களாக நடந்த விசாரணையில், குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. தீர்ப்பில், நீதிபதி பகவதி யம்மாள், மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ  மணிகண்டன் ஆகியோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.  போக்சோ சட்டத்தின்கீழ், 18 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும். மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனையும் வழங்கப்படலாம்.  இந்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை ஆயுள் தண்டனை, நீதித்துறையின் உறுதி யான அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பின ரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.