புதுதில்லி:
இந்திய ரயில்வேக்கு, வருவாய் அதிகம் கிடைக்கும் 100 வழித்தடங்களை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு பரிந்துரை வழங்கியுள்ளது.இதற்காக, ‘பயணிகள் ரயில் சேவையில் தனியார் பங்களிப்பு’ என்ற ஆய்வுக்குறிப்பு ஒன்றையும் தயார் செய்து, அதனடிப்படையில், அந்த 100 வழித்தடங்கள் எவையெவை என்ற பட்டியலையும் நிதி ஆயோக் தயாரித்து வழங்கியுள்ளது.‘தேஜாஸ்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை லக்னோ - தில்லி மார்க்கத்தில் கடந்த 2019 ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த மார்க்கத்தின் ரயில் சேவை, இந்திய ரயில்வே-யின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி-க்கு விடப்பட்டது.
அப்போதே தனியார்களையும் ரயில்வே துறையில் அனுமதிக்கலாம் என்ற கொள்கை முடிவுக்கு வந்து விட்ட மோடி அரசு, நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் தலைமையில், குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு, ‘பயணிகள் ரயில் சேவையில் தனியார் பங்களிப்பு’ (Private Participation: Passenger Trains) என்ற தலைப்பில், தனியாரை ஈடுபடுத்துவது தொடர்பான விதிமுறைகளை வகுத்து அதை விரைவு படுத்தும் வழிமுறைகளையும் உருவாக்கியது. அதனையே தற்போது, இந்திய ரயில்வேயிடம் வழங்கியுள்ளது.இந்திய ரயில்வே-க்குச் சொந்தமான 100 ரயில் வழித் தடங்களில் இயங்கும், 150 ரயில்களை தனியார் முதலாளிகளுக்கு திறந்து விட வேண்டும் என்று நிதி ஆயோக் கூறியுள்ளது. “ரயில் சேவையில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு முன்வரும்பட்சத்தில் அவற்றையும் அனுமதிக்கலாம்” என்று கூறியுள்ள நிதி ஆயோக், இந்த 100 வழித்தடங்களையும் 10 முதல் 12 தொகுப்புகளாகப் பிரித்து, ஒவ்வொரு தனியார் நிறுவனத்திற்கும் குறைந்தது 3 தொகுப்புகள் என்ற அளவில் வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கான தனியார் முதலீடுகள் வரும் என்றும் நிதி ஆயோக் கணக்குப் போட்டுள்ளது.மும்பை சென்ட்ரல் -– புதுதில்லி, புதுதில்லி - பாட்னா, அலகாபாத் - புனே, தாதர் - வதோதரா ஆகிய மார்க்கங்கள், நிதி ஆயோக் பட்டியலிட்டுள்ள வழித்தடங்களில் முக்கியமானவை ஆகும். இவை தவிர ஹவுரா - சென்னை, ஹவுரா - பாட்னா, இந்தோர் - ஆக்லா, லக்னோ -– ஜம்முதாவி, சென்னை -– ஆக்ரா, ஆனந்த் விகார் -– பாகல்பூர், செகந்திராபாத் - கவுகாத்தி, ஹவுரா - ஆனந்த் விகார் ஆகிய வழித்தடங்களும் இடம்பெற்றுள்ளன. “ரயில் சேவையில் தனியார் ஈடுபடுத்தப்படும் பட்சத்தில், சந்தை நிலவரத்துக்கேற்ப பயணிகள் கட்டணத்தை, தனியாரே நிர்ணயித்துக் கொள்ளலாம்; அதேபோல ரயில் பெட்டிகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் முன்பதிவுக்கேற்ப மாற்றங்கள் செய்து கொள்ளலாம்; மேலும் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்வது என்பதையும் அந்த தனியார் நிறுவனங்களே திட்டமிட்டு முடிவு செய்துகொள்ளலாம்” என்றும் நிதி ஆயோக் தாராளம் காட்டியுள்ளது.