tamilnadu

img

ஓவர்டைம் மோடி....நாடாளுமன்றத்தை கூடுதல் நாட்கள் நடத்தி ஏழைகளுக்கு என்ன செய்துவிட்டீர்கள் ?

திருநெல்வேலி:
ஓவர்டைம் போட்டு நாடாளுமன்றம் நடத்தி ஏழைகளுக்கு என்ன செய்தீர்கள் என்று சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் கேள்வி எழுப்பினார். நெல்லையில் நடந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 3 நாள் மாநில மாநாட்டின் நிறைவாக திங்களன்று (ஆக.19) நடந்த பேரணி- பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

வேலைக்கு போவோம்,  நிரந்தரமாவோம். பணிப்பாதுகாப்புடன் வாழ்க்கையை நடத்துவோம். சம்பளம் பெற்று குடும்பத்தை காப்போம் என்பதுதான் நம்முடைய எண்ணம். குடும்பத்தைக் காப்போம் என்பற்கு மாறாக இப்போது மின்துறையை காப்போம், பொதுத்துறையை காப்போம், தேசத்தைக் காப்போம் என்று  நாம் பேச நேர்ந்திருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இந்த நாட்டை ஏழை எளிய மக்களுக்கு உரியதை காப்பாற்றும் பொறுப்பு இறுதியில் தொழிலாளர்களின் தோள்களில்தான் விழும் என்பதை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.எல்லாவற்றுக்கும் ஆபத்து .நீதிமன்றம் உட்பட அரசியல் சட்டம் உருவாக்கிய அனைத்துக்கும் ஆபத்து. இத்தனை ஆண்டு களாக எதையெல்லாம் இந்தியாவின் பெருமை என்று கூறிக்கொண்டிருந்தோமோ அவற்றுக்கெல்லாம் ஆபத்து.தேர்தல் ஆணையம் இந்தியாவின் பெருமை. வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பெருமை. எத்தனை மொழி இருந்தாலும் அத்தனையும் இங்கே இணங்கி வாழும் என்பது இந்தியாவின் பெருமை. புத்தர், காந்தி, வள்ளலார், பெரியார் போன்றோர்பிறந்தது இந்தியாவின் பெருமை என்று கூறியது ஒவ்வொன்றாக தகர்க்கப்படுகிறது. இதிலிருந்து நமது கவனம் திசை திருப்பப்படுகிறது.மோடி வாயை திறந்தால் வளர்ச்சி வளர்ச்சி என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்  வளர்ச்சி, முன்னேற்றம் என்று கூறி கொண்டுவரும் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்போது ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. 

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடி ஏராளமான புது திட்டங்களை கொண்டு வருகிறார்; அதையெல்லாம் பார்த்து நான் மெய்மறந்து போகிறேன் என்கிறார். அந்த திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் என்ன என்பதை அவர் கூற வேண்டும். இவரது சக தொழிற்துறை அமைச்சர் ஆறு மாதங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் கூறினார். “50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர்” என்று. இது யாருடைய திட்டத்தின் பலன்? வேலையிழப்பு அதிகரித்து இன்று தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் தொழி லாளர்கள்  ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் வேலை இழந்துள்ளதாக முதலாளிகள் சங்கம் அறிவிக்கிறது. 

‘காட்டை வித்து கள்ளு குடிச்சவன்’
மோடியின் திட்டம் என்ன? பண மதிப்பு நீக்கம் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழில்களை அழித்து விட்டார்கள். ரயிலோ மற்ற பொது போக்குவரத்தோ இல்லாதபோது புல்லட் ரயில் குறித்து பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் எத்தனை மலை போனாலும் சரி, கனிம வளம் போனாலும் சரி சேலத்துக்கு 8 வழி விரைவுச்சாலை அமைத்தே தீருவேன் என்கிறார் எடப்பாடி.  பட்ஜெட்டில் ரூ.5லட்சம் கோடியை பெரும்முதலாளிகளுக்கு சலுகைகளாக வாரி வழங்கியிருக்கிறீர்கள். வங்கியில் வாங்கியகடனை எந்த பெருமுதலாளியும் கட்டுவ தில்லை. ஓவர்டைம் போட்டு நாடாளுமன்றம் நடத்தி ஏழைகளுக்கு என்ன செய்தீர்கள்? நிர்மலா சீதாராமன் கூறுகிறார், “நாங்கள்  70லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளா தாரமாக வளர்த்திருக்கிறோம்” என்று. பணம் எங்கிருந்து வரும் என்று கேட்டால், பொதுத்துறைகளை விற்பதிலிருந்து, ஒரு லட்சம் கோடி கிடைக்கும் என்கிறார். ஒருவரை ஆட்சியில் அமர வைப்பது நாட்டின் சொத்துகளை பாதுகாத்து வைக்கத்தான். ‘காட்டை வித்து கள்ளு குடிச்சவன்’ கணக்காக  பொதுத்துறையை விற்பேன் என்கிறார்கள் இவர்கள். 

மின்வாரியத்தின் சமூகப் பொறுப்பு
தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு விவசாய நிலங்களுக்கான இலவச மின் இணைப்பை வழங்கியுள்ளது. இது சமூக பொறுப்பு. இப்படி செய்யாமல் போயிருந்தால் பட்டினி சாவுகள் நடத்தி ருக்கும். இதுபோல் போக்குவரத்துக் கழகபேருந்துகளில் மாணவர்களுக்கான இலவசபயணம் அனுமதிக்கப்படுகிறது. இது செய்யப்பட வேண்டும். அதனால் தான் தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. இவை சமூகத்துக்கு கிடைத்த லாபம். இதை நட்டமாக எப்படி மதிப்பீடு செய்ய முடியும்? நீதிபதிகளே இப்போது லாபம் இல்லாத நிறுவனங்களை விற்றுவிடுமாறு பேச ஆரம்பித்துள்ளார்கள். தனியார் நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் தான் இயங்குகின்றனவா? சென்னையில் 18 ஆயிரம் பேர் வேலை செய்த
பின்னி மில் போல  கோவை, மும்பை எனநூற்றுக்கணக்கான மில்கள் நட்டம் எனகணக்கு காட்டி மூடப்பட்டனவே! பொதுத்துறையை லாபமாக நடத்துவதற்கான வழிகளை ஆராய வேண்டும். அதை செய்யாமல் தனியாரிடம் விடவேண்டும் என்று மத்திய அரசு பேசுவது குறுகிய கண்ணோட்டம். இன்னும்சில மாதங்களில் இவர்கள் மேற்கொண்டுள்ள பொருளாதாரச் சிதைவுகள் ஒவ்வொரு வீட்டிலும் பிரதிபலிக்கும்.  எனவே, மோடியின் அரசு பன்னாட்டு, உள்நாட்டு கம்பெனிகளுக்கு சாதகமாக செய்பவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். மக்களுக்காக நாம் நடத்தும் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர்  பேசினார்.

;