பெரம்பலூர், ஏப்.24-அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா பொன்பரப்பி கிராமத்தில் ஏப்.18 அன்று வாக்குப் பதிவின் போது தலித் சமூகத்தினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏப்.23 அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில்மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநிலதுணைச் செயலாளர் எஸ்.கீதா, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பத்மாவதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் ஏ.கந்தசாமி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில்சந்திக்க சென்றனர்.ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அங்கு செல்லவிடாமல் தடுத்ததால் வாக்குவாதம் நடந்தது. நீண்ட நேர போராட் டத்திற்கு பின்பு உள்ளே சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் மாதர் சங்க தலைவர் வாலண்டினா தெரிவிக்கையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க முடிவு செய்திருந்த காரணத்திற்காக இந்த வன்முறைவெறியாட்டம் நடைபெற்றுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரையும் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர். சிறுபான்மையினர் உள்ளஇப்பகுதி சமூகத்தினருக்கு ஒவ்வொருதேர்தலின் போதும் தொடர்ந்து அச்சுறுத்தல் நடந்து வருவது வேதனைக்குரியது.
தற்போது இடைத்தேர்தல் வருவதால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பு செய்யும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தினர் மீதே கொலை வழக்குப் பதிவு செய்துள்ளதை மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் சாதி ஆதிக்க சமூகத்தை சேர்ந்த பகுதியிலிருந்துதான் வாட்டர்டேங்க், மின் விநியோகம் செய்யும்டிரான்ஸ்பார்மர், ரேசன் கடை உள்ளதால் இங்கு உள்ள தலித் மக்களின் வாழ்வாதாரம் பிரச்சனைக்குரியதாக உள்ளது. எனவே தலித் சமூக மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கவேண்டும். சாதி ஆதிக்க பகுதியில் இயக்கப்படும் வாட்டர் டேங்க், மின்விநியோகம் செய்யும் டிரான்ஸ்பார்மர், ரேசன் கடைகளை பிரித்து தனியாக அமைக்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உள்நோக்கத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார். மாதர் சங்க நிர்வாகிகள் மணியம்மாள், பல்கீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.