அவிநாசி, மே 9-அவிநாசி அடுத்த சேவூரில் மணல் கடத்திய டிப்பர் லாரியை கனிம வளத்துறையினர் பிடித்தனர். ஆனால் கடந்த 10 நாட்களாக வழக்குப் பதிவு செய்யாத நிலையில், வியாழனன்று வழக்குப் பதிவு செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.அவிநாசி ஒன்றியத்தில் உள்ள குளம், குட்டைகளில் தொடர்ந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ஏப் 28ஆம் தேதி அவிநாசி ஒன்றியம் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பவர் ஹவுஸ் பகுதியில் திருப்பூர் கனிம வளத்துறையினர் சட்டவிரோதமாக மணல் கடத்திய 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒரு டிப்பர் லாரியை பிடித்தனர். இந்த 4 டிப்பர் லாரிகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 4 டிப்பர் லாரிகளில் ஒரு டிப்பர் லாரி மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 10 நாட்களுக்கு பிறகு வியாழனன்று வட்டாட்சியர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள் சேவூர் காவல் நிலையத்தில், டிப்பர் லாரி உரிமையாளர் ராதாமணி மற்றும் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு டிப்பர் லாரி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இரு டிப்பர் லாரி உரிமையாளர்கள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மீதமுள்ள இரு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் வழக்குப் பதியாமல் உள்ளனர். மேலும் மணல் கடத்திய டிப்பர் லாரியை பிடித்தவுடன் வழக்குப் பதிவு செய்யாமல், பத்து நாள்களுக்கு பின்பு வழக்குப் பதிவு செய்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் கடத்திய டிப்பர் லாரிகள் (கோப்பு படம்)