tamilnadu

img

பொதுத் துறை நிறுவனங்களின் மூலம் ஒன்றிய அரசு பெறும் ஈவுத்தொகை இரட்டிப்பு

பொதுத் துறை நிறுவனங்களின் மூலம்  ஒன்றிய அரசு பெறும் ஈவுத்தொகை இரட்டிப்பு

புதுதில்லி, ஜூலை 20 -  கடந்த 5 ஆண்டுகளில் பொதுத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களிடமிருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் வருவாய் ரூ.74 ஆயிரம் கோடி என்ற அளவிற்கு இரட்டிப்பாகி உள்ளது. இந்த வருமானம் கிடைப்பதில் சில எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்று ‘தி இந்து’ நாளிதழ் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  வருவாய் குறித்த இந்த ஆய்வு, ரிசர்வ் வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தவிர்த்து நடத்தப்பட்டது. முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையில் (Department of Investment and Public Asset Management (DIPAM), நிறுவனங்கள் வாரியாக நடத்தப்பட்ட வருவாய் தரவு குறித்த ஆய்வு, கடந்த 2020-21 ஆம் நிதியாண்டிலிருந்து, பொதுத் துறையின் கீழ் செயல்படும் ஐந்து எரிபொருள் சார்ந்த நிறுவனங்களின் மொத்த வருவாயில், 42 சதவீதத்தை ஒன்றிய அரசு பெற்றுள்ளது என தெரிவிக்கிறது. ரூ.1.27 லட்சம் கோடி 2020-21 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கு இடையே, பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் செயல்படும் வங்கிசாரா நிறுவனங்களான, நிலக்கரி இந்தியா லிமிடெட் (Coal India limited), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேசன் (ONGC), இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் (BPCL), கெயில் (இந்தியா) ஆகியவை, அதன் மொத்த வருவாய் ரூ.3 லட்சம் கோடியில், ரூ.1.27 லட்சம் கோடியை அல்லது 42.3 சதவீதத்தை ஒன்றிய அரசுக்கு லாபப் பங்காக செலுத்தியுள்ளன.  பொதுத் துறையின் கீழ் நேரடியாகச் செயல்படும் எரிபொருள் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான (OMCs) இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (ஐஓசி) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பிபிசிஎல்), ஒன்றிய அரசுக்கு வழங்கும் ஈவுத்தொகையில் 2022-23-லிருந்து 255 சதவீத உயர்வை கண்டது. மேலும், எரிபொருள் விலையில் 65 சதவீதம் குறைவை சந்தித்துள்ளது. எனினும், அவை பெட்ரோல் விலையில் 2 சதவீதத்தை மட்டுமே குறைத்து பொதுமக்களுக்கு வழங்கின. பொதுத் துறையின் கீழ் செயல்படும் மூன்றாவது எரிபொருள் சந்தைப்படுத்தல் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம், ஓஎன்ஜிசி-யின் கீழ் செயல்படுகிறது; அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படவில்லை. கோவிட் காலத்திலிருந்தே வருவாய் அதிகரிப்பு கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலிருந்து, பொதுத் துறையின்கீழ் செயல்படும் வங்கி சாரா நிறுவனங்களின் மொத்த வருவாய் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிறுவனங்களிடமிருந்து 2020-21 ஆம் ஆண்டில் ரூ.39,558 கோடியை ஒன்றிய அரசு வருவாயாக பெற்றுள்ளது. 2024-25 ஆண்டில் இந்த வருமானம் ரூ.74,017 கோடி என்ற அளவிற்கு இரட்டிப்பாகி இருக்கிறது. இவை, வருவாய் மற்றும் ஈவுத் தொகையை சமநிலைப்படுத்துவதற்கான, அளவீடு செய்யப்பட்ட அணுகுமுறையே இதற்குக் காரணம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவிட் பெருந்தொற்று காலத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட பங்கு விலக்கல் கொள்கை (disinvestment policy), இன்னும் அதே இடத்தில்தான் இருக்கிறது. ஆனால் அது ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக முன்னேறவில்லை என்கின்றனர் அதிகாரிகள். அதே நேரம், பொதுத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் மிகவும் லாபகரமானதாக இருப்பதால், அவற்றின் வருவாய்த் தொகையை ஒன்றிய அரசு உயர்த்திக் கொண்டே இருக்கிறது. சுற்றறிக்கை மூலம் அழுத்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை மூலம், அனைத்து அரசுத் துறைகளுக்கும், பொதுத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களின் மேலாண் இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், “இந்நிறுவனங்கள் தங்கள் பங்குதாரர்களுக்கு (அதில் மிகப்பெரியது ஒன்றிய அரசு) எவ்வளவு ஈவுத்தொகையை வழங்க வேண்டும்” உள்ளிட்ட புதிய விதிகளை தெரிவித்திருந்தது. இந்த புதிய விதிகளின்படி, ஒன்றிய அரசின் பொதுத்துறையின் கீழ் செயல்படும் ஒவ்வொரு நிறுவனமும், அதன் வரிக்குப் பிந்தைய லாபத்தில் 30 சதவீதம் அல்லது நிகர மதிப்பில் 4 சதவீதம், இதில் எது அதிகமோ, அதைக் கொண்டு குறைந்தபட்சம் வருடாந்திர ஈவுத்தொகையாக வழங்க வேண்டும். உண்மையில், இந்நிறுவனங்கள் தற்போது செலுத்துகிற கட்டாயத் தொகையை விட அதிகமாக செலுத்தும் நிலைக்கு, ஒன்றிய அரசு அந்நிறுவனங்களுக்கு அழுத்தம் தருகிறது. ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்கள், “லாபம், உரிய அந்நியச் செலாவணியுடன் கூடிய மூலதன தேவைகள், ரொக்க இருப்பு மற்றும் நிகர மதிப்பு உள்ளிட்ட தொடர்புடைய காரணிகளை கருத்தில் கொண்டு, அதிக ஈவுத் தொகையை வழங்க அறிவுறுத்தப்படுகின்றன” என்கின்றன அந்த விதிகள்.