tamilnadu

img

தொடர் புயல் மழை மற்றும் மூடுபனி.... 15 ஆயிரம் ஏக்கரில் அழுகிய செங்காந்தள் மலர்கள்...

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் மழை மற்றும் மூடுபனி காரணமாக 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட செங்காந்தள் மலர் செடிகள்அழுகி, விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சங் கள் செலவு செய்து ஒரு வருடமாக மகசூலுக்காக காத்திருந்த விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். 

தமிழகத்தின் மாநில மலர் செங்காந் தள் ஆகும். பார்ப்பதற்கு கண்களை பறிக்கும் தீயின் நிறத்தைக் கொண்ட இது கண்வலிப்பூ என்று அழைக்கப்படுகிறது. இந்த அழகிய மலர் தான் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கும் மலராகும். இதன் விதை ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஏர் கலப்பையை போலஇதன் கிழங்கு இருப்பதால் கலப்பைக் கிழங்கு செடி என்றும் செங்காந்தளை அழைப்பார்கள். இந்த கலப்பை கிழங்கைவிவசாயிகள் வாங்கிச்சென்று விளைவித்து ஒரு வருடமாக மகசூலுக்காக காத்திருந்தார்கள். இதற்கிடையே உரம்,பூச்சிமருந்து என பல லட்சம் செலவு செய்து வேளாண்மை செய்த நிலையில் கடந்த சில வாரங்களாக நிவர் மற்றும் புரெவி புயலால் தொடர் மழை மற்றும் மூடுபனியின் காரணமாக இந்த செங் காந்தள் மலர்கள் அழுகிவிட்டன. 

செங்காந்தள் விவசாயி சண்முகம் கூறுகையில் , திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தாலுகாவில் வடமதுரை, மலைப்பட்டி, கொம்பேறிபட்டி, ஒட்டன் சத்திரம் ஒன்றியம், தொப்பம்பட்டி ஒன்றியப் பகுதிகளில் கிட்டத்தட்ட 15 ஆயிரம்ஏக்கரில் பயிரிடப்பட்ட இந்த செடிகள் அனைத்தும் அழுகி காய்ந்து கருகி உள்ளன. கடந்த ஓராண்டாக பராமரிக்கப் பட்டு வந்த இந்த செடிகள் கருகியதால்விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். வருமானம் இழந்து உள்ளனர். இதனால் பட்ட கடன்களையும் திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்றார். 

 இழப்பீடு வழங்கிடுக!
இந்த பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.பெருமாள் கூறுகையில், மாவட்டத்தில் செங்காந்தள் பயிரிடும் விவசாயிகள் மகசூலுக்காக காத்திருந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை ஓரளவு நல்ல பலன் தரும் என்று எதிர் பார்த்திருந்த நிலையில் நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக தொடர்மழையும் அதனையடுத்து தொடர் மூடுபனியின் காரணமாக செங்காந்தள் மலர்கள் அழுகி கருகியுள்ளன. செங்காந் தள் பயிரிடும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் இந்த சோகத்தை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, உரிய இழப் பீடு கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

;