தருமபுரி, ஏப்.11-நல்லம்பள்ளி வட்டம், தேவரசம்பட்டியில் குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து தருமபுரிமாவட்ட ஆட்சியர் குடியிருப்புஅருகே பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட தேவரசம்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த ஒரு மாதமாகஒகேனக்கல் குடிநீர் வழங்கவில்லை. மேலும் ஊராட்சியில் ஆழ்துளை மூலம் வழங்கப்படும்தண்ணீரும்சில நாட்களாக விநியோகிக்கவில்லை. தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்திஅப்பகுதிமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை முறையிட்டனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர். சிலர் சைக்கிள் மூலம் விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தனர்.தொடர்ந்து சிரமத்துக்குள்ளான பெண்கள் ஆவேசம் அடைந்த அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதியமான் கோட்டைபஞ்சாயத்து நிர்வாகம் 2 நாட்களில் குடிநீர் முழுமையாக வழங்கநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பெண்கள் களைந்து சென்றனர்.