tamilnadu

img

இந்தி திணிப்பு ஓர் அரசியல் குற்றம்

மொழிதான் நம்மை மனிதனாக உருவாக்குகிறது. மனிதகுல பரிணாமத்தின் பொழுது வெளி உலகுடன் தொடர்பை உருவாக்குவதில் மொழிதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மனிதன் அறிவை பெறுவதற்கு மொழிதான் அடித்தளம்.  உயிர் வாழ்வதற்கு காற்றும் நீரும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அறிவுக்கும் சிந்தனைக்கும் மொழி அவசியம் ஆகும்.  மனிதன் அல்லது அவன் மூதாதையர் சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு விதமான மொழியை பயன்படுத்தினர் என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனித வரலாற்றில் குறுக்கிட்ட “ஐஸ் ஏஜ்” எனும் உறைபனிக்கால சகாப்தங்கள் கூட மனிதனின் மொழி பயன்பாட்டையும் மொழிக்கான அவனது தாகத்தையும் முயற்சியையும் தடுக்க இயலவில்லை. சுமார் 70,000 ஆண்டுகளாக இடையறாது மொழி தளத்தில் இயங்கிய அந்த மனித மூளையின் கற்றல் திறன் அனைத்தையும்  இன்றைக்கு புதியதாக பிறந்த குழந்தை வெளிப்படுத்தும் ஒரு கட்டத்தில் நாம் உள்ளோம். பள்ளிக்கு செல்லும் பொழுதே மொழியின் சில முக்கிய கூறுகளை தன்னகத்தே குழந்தை பெற்றுள்ளது. பள்ளி கல்வி இந்த திறனை மேலும் செழுமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனினும் மொழியின் முழு பரிணாமத்தையும் அதன் மூலம் ஏனைய அனைத்து அறிவாற்றலையும் குழந்தை அறிந்து கொள்ள அது தாய் மொழியில் கல்வியை கற்பது அவசியமாகிறது.

மொழிப் பிரச்சனையில் மற்ற தேசங்களின் நடைமுறை என்ன?
 

மத்திய அரசாங்கம் மும்மொழிக் கொள்கையை வெளியிட்டு ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தருணத்தில் பல தேசங்களில் குழந்தைகள் எவ்வளவு மொழிகளை கற்குமாறு கூறப்படுகின்றனர் எனும் கேள்வியை முன்வைப்பது அவசியமாகிறது. இக்கேள்விக்கான பதில் நம்மிடம் கோபத்தையும் அவமானத்தையும் ஒரு சேர உருவாக்கும்.  இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பக் கல்வியில் ஒரே ஒரு மொழிதான் அதுவும் தாய் மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது. அதற்கு மேலே வரும் பொழுதுதான் அவர்கள் விரும்பும் மற்றொரு மொழி குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. அமெரிக்காவில் ஆரம்பக் கல்வியில் ஆங்கிலம் மட்டும்தான்! பின்னர் ஸ்பானிஷ் அல்லது வேறொரு மொழி அனுமதிக்கப்படுகிறது.  ஜப்பானில் ஆரம்பக் கல்வியில் ஜப்பானிய மொழி மட்டுமே! பின்னர் ஆங்கிலம் அனுமதிக்கப்படுகிறது. ஹாங்காங்கில் ஆங்கிலமும் பின்னர் சீன மொழியும் கற்பிக்கப்படுகின்றன. எகிப்தில் அரேபிய மொழி மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பின்னர் ஆறு ஆண்டு காலம் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக குழந்தைகள் கற்க வேண்டும். உலகம் முழுதும் குழந்தைகள் தமது தாய் மொழியை மட்டுமே ஆரம்பக் கல்வியில் கற்கின்றனர். பின்னர் இடைநிலைக் கல்வியில் இரண்டாவது மொழி கற்பிக்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டும்தான் குழந்தைகள் மூன்று மொழியை கற்க நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள், குறிப்பாக பழங்குடி இன மக்களின் மொழிகள், ‘மொழி’ எனும் அங்கீகாரத்தை இழந்துள்ளன. அத்தகைய குழந்தைகள் நான்கு மொழிகளை கையாளும் சுமை அரசாங்கத்தால் உருவாக்கப்படுகிறது.

இடை நிற்றலுக்கு மொழிச் சுமையும் ஒரு காரணம்!

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு 2016ம் ஆண்டு இந்தியாவில் சுமார் 4.7 கோடி குழந்தைகள் பத்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை கைவிட்டு விட்டனர் என கண்டுபிடித்துள்ளது. இதற்கு பெண் குழந்தைகளிடம் காட்டும் பாரபட்சம், குடும்ப பொருளாதார சூழல், பெண் குழந்தைகளுக்கு கழிப்பிட வசதியின்மை என பல காரணங்கள் உள்ளன. இவற்றுடன் இன்னொரு முக்கிய காரணம் மொழிச் சுமையும் ஆகும். குழந்தைகள் மூன்று அல்லது நான்கு மொழிகளை கற்க திணிக்கப்படும் பொழுது பல குழந்தைகள் பள்ளிக் கல்வியை கைவிடும் போக்கு உருவாகிறது. உலகம் முழுதும் நடைமுறைப்படுத்தும் அறிவியல் அடிப்படையிலான மொழிக் கோட்பாட்டை இன்று அல்லது நாளை இந்தியாவும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அது என்ன? தாய்மொழிதான் குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஏற்ற மொழி! தாய்மொழி வழிக் கல்விதான் குழந்தைகளுக்கு ஆழமான அறிவையும் புரிதலையும் உருவாக்கும். இந்த கோட்பாட்டை எவ்வளவு சீக்கிரம் ஆட்சியாளர்கள் உணர்கிறார்களோ அவ்வளவு நல்லது.  எனினும் தாய்மொழி என்பது என்ன? அரசாங்கம் திணிக்கும் மொழி தாய்மொழி அல்ல! ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள் எந்த மொழி தாய்மொழி என்று முடிவு செய்கின்றனரோ எந்தமொழி குழந்தையின் கற்றலுக்கு எளிதாக உள்ளதோ  அந்த மொழிதான் தாய் மொழியாக இருக்க இயலும். வேறு எந்த மொழியும் குழந்தை மேல் திணிக்கப்படக் கூடாது. 

மொழிக்கான போராட்டங்கள்!
மொழிப் பிரச்சனையில் நமது தேசம் பல போராட்டங்களை சந்தித்துள்ளது. தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா போன்ற பல மாநில மக்கள் தமது மொழிக்காக போராடியுள்ளனர். இந்த போராட்டங்களை அவ்வப்பொழுது ஆட்சியாளர்கள் மறந்துவிடுகின்றனர். கல்விக் கொள்கை என அவ்வப்பொழுது ஆட்சியாளர்கள் அறிவிப்பது வாடிக்கை! ஆனால் எத்தனை முறை இத்தகைய கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பொழுதும் கல்வியின் தரம் உயரவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. புதிய தேசிய கல்வி கொள்கை பழைய காயங்களை மீண்டும் உரசிப்பார்க்கிறது. சிலரின் தேர்தல் பிரச்சாரம் வரைமுறையற்ற விதத்தில் அமைந்தது. அது தேசத்தை பல தளங்களில் பிளவை உருவாக்கியுள்ளது. இந்த தருணத்தில் இந்த கல்வி கொள்கை அந்த பிளவை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை உருவாக்குகிறது. இந்தியை திணிப்பது என்பது மாநிலங்களுக்கு அரசியல் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளை தகர்க்கும் செயலாகும்.

இந்தி பேசுவது எத்தனை பேர்?

இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்க முற்படும் பா.ஜ.க.வின் ஆர்வக்கோளாறு மிகவும் தவறான அடித்தளத்தை கொண்டதாகும். தேசத்தின் மொழிகள் பற்றிய விவரங்களும் எந்த மொழி எந்த மக்கள் பிரிவினரால் பேசப்படுகின்றன எனும் உண்மையான விவரங்களும் பா.ஜ.க. அரசாங்கத்திடம் இல்லை. 2011 மக்கள் தொகைக் கணக்கீடு 52 கோடி மக்கள் இந்தியை தாய் மொழியாக கொண்டுள்ளனர் என குறிப்பிடுகிறது. ஆனால் இந்த கணக்கீடு மிகவும் மோசடியானது. போஜ்பூரி மொழி பேசும் 5 கோடிப் பேரையும் இந்தி பேசுவதாக தவறாக சேர்த்துள்ளனர். அதே போல 61 வெவ்வேறு மொழிகளைப் பேசும் 9 கோடிப் பேரும் இந்தி மொழிக்கான பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த 61 மொழிகளைப் பேசும் சமூகங்கள் இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா என பல மாநிலங்களில் பரவி உள்ளனர். துல்லியமாக கூறுவதானால் இந்தியாவில் சுமார் 30% பேர்தான் இந்தி பேசுகின்றனர். 70% பேருக்கு இந்தி தாய் மொழியாக இல்லை. தெரிந்தே ஒரு மொழிக்கு ஆபத்தை உருவாக்குவது என்பது இனப் படுகொலைக்கு சமம் என யுனெஸ்கோ கூறுகிறது. தேசியத்தை பரவலாக்குவது எனும் பெயரால் இந்தியை திணிக்க அரசாங்கம் முனைகிறது. இதற்கான குற்றவாளிகள் இந்தி பேசும் சாதாரண மக்கள் அல்ல! மாறாக இந்தி மொழியை தவறாக பயன்படுத்தும் போலி தேசியவாதிகளின் அரசியல் குற்றம் இது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கும் பொறுமை இவர்களுக்கு இல்லை. பன்முகத்தன்மையை உத்தரவாதப்படுத்தும் நமது அரசியல் சட்டத்தை காக்கும் பொறுமையும் இவர்களிடம் இல்லை.

மொழி முரண்பாடு துவக்கமா?

பா.ஜ.க. அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கு மிகவும் காத்திரமான கோபமான எதிர்வினைகள் முன்வந்துள்ளன. இது இந்தி அல்லாத மொழிகளின் ஜனநாயக ஆர்வத்தை பிரதிபலிப்பது எனில் மிகை அல்ல. எனினும் இந்தி திணிக்கப்படமாட்டாது என அரசாங்கம் கூறியுள்ளது. பா.ஜ.க.அரசாங்கத்தின் இந்த பதுங்கல் தற்காலிகமானதுதான் எனக் கருதுவதில் தவறு இருக்காது. ஆனால் மொழி திணிக்கும் முயற்சி என்பது தொடக்கம்தான். ஒரு நாசகரமான அரசியல் கருத்தாக்கத்தின் ஆபத்தை இந்த மொழித்திணிப்பு கட்டியம் கூறுகிறது எனில் மிகை அல்ல! போலி தேசியவாதிகளுக்கும் அரசியல் சட்டம் காக்கப்பட வேண்டும் என எண்ணும் ஜனநாயகவாதிகளுக்கும் இடையே பல முரண்பாடுகள் வெடிக்க காத்திருக்கின்றன. கலாச்சாரம், மொழி, அறிவாற்றல், நம்பிக்கை, வரலாறு, உலக கண்ணோட்டம், நவீனம் எனப்படுவது யாது என்பன போன்ற பல அம்சங்களில் இந்த முரண்பாடுகள் முன்னுக்கு வரும் ஆபத்து உள்ளது. வடக்கு- தெற்கு எனும் வடிவத்தில் இந்த மோதல் உருவாகிவிடக் கூடாது என நம்புவோமாக! நாகரீகம் மற்றும் அறிவாற்றல் ஆகிய இரண்டுக்குமே மொழிதான் அடித்தளம். எனவே எதிர்கால முரண்பாடுகளுக்கு மொழித் திணிப்பு துவக்கமாக அமைந்துவிடக்கூடாது.

- தமிழில்: அ. அன்வர் உசேன். 
 

கட்டுரையாளர் : இந்திய மக்கள் மொழியியல் ஆய்வகம்
 (Peoples Lingusitic survey of India) எனும் அமைப்பின் தலைவர் 07.06.2019 ஆங்கில இந்துவில் வெளி வந்த அவரது கட்டுரையின் தமிழாக்க சுருக்கம் இது