tamilnadu

அயனாவரம் பகுதியில் ஒருகுடம் தண்ணீரின் விலை ரூ.10

சென்னை,ஏப்.24-பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர்வழங்கும் பூண்டி, புழல்,செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. இதையடுத்து சென்னையில் குடிநீர் விநியோகம் பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.இதேபோல் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போர்வெல்களில் தண்ணீர் வரத்து நின்று விட்டது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.இதனை பயன்படுத்தி சில தனியார் வாட்டர் விநியோக நிறுவனங்கள் கூடுதல்விலைக்கு தண்ணீரை விற்று வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தனியார் வாட்டர் விநியோக நிறுவனங்கள் தங்களது லாரி மற்றும் டிராக்டர்களில் தண்ணீரை கொண்டு சென்று தட்டுப்பாடான பகுதிகளில் நிறுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.புதனன்று காலை அயனாவரம், போர்ச்சீஸ் சாலையில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குடங்களுடன் திரண்டனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனைசெய்யப்பட்டது.தண்ணீர் கிடைக்காமல் உள்ளதால் பொதுமக்கள் காசு கொடுத்து நீண்ட வரிசையில் காத்து நின்று தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.