tamilnadu

img

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு 

அம்பத்தூர், செப். 16- ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள "நில் கவனி நேசி" எனும் விழிப்புணர்வு குறும்படம் அண்மை யில் தயாரிக்கப்பட்டது.  அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையர் கி.சங்கர் தலைமை வகித்து நில் கவனி நேசி எனும் குறும்பட சிடியை வெளியிட்டார். தொடர்ந்து அவர் கல்லூரி மாணவ- மாணவிகளிடையே பாதுகாப்பான பயணம் மற்றும் வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய முக்கிய சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு குறும்படமும் கல்லூரி மாணவ- மாணவிகளிடையே திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாலை விபத்துகளின் பாதுகாப்பு குறித்து கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த மாணவர்களின் நடன கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிகள் சம்பந்தமான வினாடி, வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்ற 10 மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ.1,000 பரிசு தொகையை ஆணையர் சங்கர் வழங்கினார். விழாவில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ்  போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ரீல்ஸ்களை தயார் செய்து செவ்வாய்க்கிழமை (செப்.16) முதல் அக். 5ஆம் தேதி வரை பெயர், தொடர்பு எண், சமூக வலை தள முகவரி ஆகிய வற்றை avadactrafficplanning @gmail.com என் மின்னஞ்சல் முக வரிக்கு அனுப்பப்பட வேண்டும்.