தேவிரஅள்ளியில் சாதிவெறி தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போராட்டம்
கிருஷ்ணகிரி, செப். 24- தேவிரஅள்ளியில் பட்டியலின மக்களை கோவிலுக்குள் வரவிடாமல் சாதிப்பெயர் சொல்லி கடுமையாக தாக்கிய ஆதிக்க சாதி வெறியர்களை உடனடி யாக கைது செய்யக் கோரி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று (செப்.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், தேவிரஅள்ளி கிராமத்தில் கடந்த 10 ஆம் தேதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த பட்டு, விஜய், தடுக்க வந்த வினோத்குமார் ஆகியோர் மீதுஆதிக்க சாதி வெறி கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதிப்பெயர் சொல்லி திட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திய லெனின், பிரசாந்த், ராஜசேகர், விக்னேஷ், பிரேம் உள்ளிட்ட சாதிவெறி கும்பலை சேர்ந்த ஒருவரையும் கைது செய்யவில்லை. குற்ற வாளிகளுக்கு துணை போகும் காவல் துறையினரை கண்டித்தும் இந்த விவ காரத்தில் வட்டாட்சியரும், மாவட்ட ஆட்சி யரும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்த குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் டி.முரளி, மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.கே.நஞ்சுண்டன், கே.மகாலிங்கம், போச்சம்பள்ளி வட்டச் செயலாளர் சாமு, ஊத்தங்கரை வட்டச் செயலாளர் சபாபதி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், ரவி, கோடீஸ்வரன், நாராயணமூர்த்தி, முன்னாள் வட்டச் செயலாளர் சின்னச்சாமி, எத்திராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.