அயப்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்
அம்பத்தூர், ஆக.29- ஆவடி அருகே அயப்பாக்கத்தில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் சா.மு.நாசர் வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லையை இரண்டாகப் பிரித்து புதிய காவல் நிலையத்தை அயப்பாக்கத்தில் உரு வாக்க வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் முன்பு காவல் நிலையக் கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடம் சீர மைக்கப்பட்டு காவல் உதவி மையமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அண்மையில் அயப்பாக்கம் காவல் உதவி மையத்தை, காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு ஆவடி காவல் ஆணையரகத்தில் 30-ஆவது காவல் நிலை யமாக அரசு அறிவித்தது. இந்த நிலையில் வெள்ளிக் கிழமை அயப்பாக்கம் காவல் நிலையத்தை சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்து விளக்கு ஏற்றி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த புதிய காவல் நிலையத்தில் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஜோதி நகர், விவேகானந்தர் நகர், அண்ணா நகர், எழில் நகர், அபர்ணா நகர், தேவி நகர், அம்பிகை நகர், அயப்பாக்கம், அம்பத்தூர் ஏரி பகுதிகளை உள்ளடக்கி எல்லை பரப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் 2 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள், 9 முதல் நிலை காவலர்கள் 17 இரண்டாம் நிலை காவலர்கள் என 31 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர், கூடுதல் ஆணையர் கே.பவானீஸ்வரி, மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினர் க.கணபதி, ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.