tamilnadu

img

தமுஎகச மூத்த தலைவர் பேரா.அருணனுக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது

சென்னை, டிச. 23 - தமுஎகச மூத்த தலைவர் பேரா.அருணனுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி  பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் டிச.27ஆம் தேதி தொடங்குகிறது.

புத்தக்காட்சியை  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொள்கிறார். இந்த தொடக்கவிழாவில் துணை முதலமைச்சர், முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) வழங்கும் விருதுகளையும் வழங்க உள்ளார். இது தொடர்பாக திங்களன்று (டிச.23) செய்தியாளர் சந்திப்பில் பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் கூறியதாவது: 900 அரங்குகளுடன் கூடிய புத்தகக்காட்சி டிச.27ஆம் தேதி தொடங்கி ஜன.12ந் தேதி வரை நடைபெற உள்ளது.

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். புத்தகங்களுக்கு 10 விழுக்காடு கழிவு வழங்கப்படும். நுழைவுக்கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தகக் காட்சியையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. அதன்படி பேரா.அருணன் (உரைநடை), நெல்லை ஜெயந்தா (கவிதை), சுரேஷ் குமார் இந்திரஜித் (நாவல்), என். ஸ்ரீராம் (சிறுகதைகள்), கலைராணி (நாடகம்), நிர்மால்யா (மொழிபெயர்ப்பு) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. பபாசி விருது சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது கற்பகம் புத்தகாலயத்திற்கும், சிறந்த நூலகருக்கான விருது டாக்டர் ஆர்.கோதண்டராமனுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது பெல் கோ நிறுவனத்திற்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது எழுத்தாளர் ஜோதி சுந்தரேசனுக்கும் வழங்கப்படுகிறது.

சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது முனைவர் சபா.அருணாச்சலத்திற்கும், சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது பேரா. பர்வீன் சுல்தானாவிற்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது எழுத்தாளர் சங்கர சரவணனுக்கும், முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது  மணவை பொன்.மாணிக்கத்திற்கும், சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது மரபின் மைந்தன் முத்தையாவுக்கும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.