tamilnadu

img

உச்ச நீதிமன்ற எச்சரிக்கைக்கு பணிந்தார் ஆர்.என். ரவி

சென்னை, மார்ச் 22 - தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக க. பொன்முடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்றம் விடுத்திருந்த கடுமை யான எச்சரிக்கைக்கு பணிந்து, பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக இப்பிரச்சனையில் வெள்ளிக் கிழமை முற்பகல் வரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமலேயே இருந்து வந்தார். பொன்முடி விவகாரத்தை தனிப்பட்ட கவுரவப் பிரச்சனை யாக ஆளுநர் பார்ப்பதாகவும், அவர் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க மாட்டார்; மாறாக, ஆளுநர் பதவியையே கூட ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனிடையே, மாலை 3:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ள வருமாறு பொன்முடிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் அவர் கடிதம் அனுப்பினார்.

பொன்முடி பதவியேற்பு
இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சராக பொறுப்பேற்கும் க. பொன்முடி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் பிற்பகல் 3.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அங்கு முதல்வர் முன்னிலையில் பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநருக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல், ஆளுநரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பொன்முடிக்கு, அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித் துறையே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தியின் பொறுப்பில் இருந்த கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை, முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 

மன்னிப்பு கேட்ட ஆளுநர் ரவி
முன்னதாக, பொன்முடிக்கு பதவிப்பிர மாணம் செய்து வைக்காத தனது செயலுக்காக ஆளுநர் ஆர்.என். ரவி, மன்னிப்பு கோருவதாக ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ள தகவலையும் அவர் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தார்.

தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் பாராட்டு!

“ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசிற்கு எதிராகவும், மக்கள் நலத்திட்டங்களையும் - சட்டங்களையும் முடக்கும் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய மறுத்த ஆளுநரின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் முறியடித்துள்ளது. க. பொன்முடி அவர்களின் உரிமையையும், ஜனநாயக உரிமையையும் உச்சநீதிமன்றம் நிலை நாட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள க. பொன்முடி அவர் களுக்கு வாழ்த்துக்கள். சட்டப்போராட்டம் நடத்தி ஜனநாயக உரிமையை நிலைநாட்டிய முதலமைச்சருக்கு பாராட்டுக்கள்” என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.