சிபிஎம் ஓசூர் முன்னாள் செயலாளர் கே.முருகன் காலமானார்
கிருஷ்ணகிரி, ஜூலை 7 - ஓசூரில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு இயக்கத்தை வளர்த்தவர்களின் ஒருவரான தோழர் கே.முருகன் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிறன்று (ஜூலை 6) காலமானார். 1972-ல் ஒன்றுபட்ட தர்மபுரி மாவட்டத்தில் ஓசூர் பகுதிக்கு சிப்காட் அறிவிக்கப்பட்டு 1975 முதல் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டது. அப்போது தர்மபுரியில் சிபிஎம் செயலாளராக இருந்த அர்த்தநாரி முயற்சியில் ஓசூரில் முதன்முதல் துவங்கப்பட்ட தோழர்கள் துரை, கே.முருகன், சேதுமாதவன், கிருஷ்ணப்பா ஆகிய 4 பேர் கொண்ட கிளையின் செயலாளராக தோழர் கே.முருகன் தேர்வு செய்யப்பட்டார். ஓசூரில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து கொண்டே இப்பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி ஸ்தாபக செயலாளராக இருந்து செயல்பட்டார். 1978 முதல் ஓசூரில் முதல் செயலாளராகவும், அதன் பிறகு 1985-ல் உருவாக்கப்பட்ட ஓசூர் தாலுகா கமிட்டியின் செயலாளராக 1995 வரை செயல்பட்டார். இக்காலகட்டத்தில் ஓசூரில் அசோக் லேலண்ட், பிரிமியர் மில், உமா மகேஸ்வரி மில் ஆகிய பகுதிகளில் முதன்முதலில் தோழர் கே.எம்.ஹரிபட், தர்மபுரி மாவட்ட தலைவர் அர்த்தநாரி வழிகாட்டுதலில் ஓசூரில் தொழிற்சங்கத்தில் பணியாற்றிய சி.முத்து, அந்தோணி ஜார்ஜ் ஆகியோருடன் இணைந்து சிஐடியு சங்கங்களை உருவாக்கினார். 1995-க்கு பிறகு குடும்ப சூழ்நிலை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கட்சிப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றார். உடல் நலக்குறைவால் காலமான அவரது உடலுக்கு மூத்த தலைவர்கள் சேது மாதவன், சிஐடியு முன்னாள் தலைவர் சி.முத்து, சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.