ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி முறையில் அறுவைசிகிச்சை செய்ய வெளியிடப்பட்ட
அறிவிக்கையை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தேசிய கல்விக்கொள்கை 2020,"ஆயுஷ்" என்றழைக்கப்படும் ;இந்திய
மருத்துவமுறைகளை "அலோபதி" என்றழைக்கப்படும் நவீன அறிவியல்
மருத்துவத்துடன் இணைத்து "கலவை" மருத்துவமுறையை (MIXOPATHY)
உருவாக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையில்"நிதி
ஆயோக்" அமைத்த துணைக்குழு கி.பி.2030க்குள் இந்தக் கலவை முறையை
(MIXOPATHY) நடைமுறைப்படுத்துமாறு "ஆயுஷ்" மற்றும் "மக்கள்
நல்வாழ்வுத்துறை" அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில்,
இந்திய மருத்துவ மத்தியக் கவுன்சில் (Central Council of Indian Medicine) இந்த
அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய மருத்துவ முறைகளைப் போதிய நிதி ஆதாரம் மற்றும் அறிவியல்
ஆராய்ச்சியுடன் கூடிய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதன் மூலம், அவற்றின்
தனித்தன்மையைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும். மாறாக, மத்திய
அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் நடவடிக்கைகள், நவீன மருத்துவத்தை
சீர்குலைப்பதுடன், இந்திய மருத்துவ முறைகளை நாளடைவில் முற்றாக
அழித்துவிடும். மேலும், பணம் படைத்தோர் "நவீன மருத்துவ கார்ப்பரேட்"
மருத்துவமனைக்கு செல்லும் போது, ஏழை எளிய மக்கள் இத்தகைய ‘கலவை"
மருத்துவத்தை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.
மருத்துவ ரீதியாக மிகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டிய
அறுவைசிகிச்சை முறைகளை - நவீன மயக்கவியல் அறிவோ அல்லது
ஆண்டிபயாட்டிக் போன்ற மருந்துகளின் பயன்பாடோ தெரியாமல், அறுவை
சிகிச்சை செய்வது மனித உயிர்களோடு விளையாடுவது போன்றது. அதிக
அளவில் பின்விளைவுகள் (Complication) ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள்
பாதிப்புக்கு உள்ளாவார்கள்
மேலும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முதல் பல்வேறு
உயர்நீதிமன்றங்கள் வரை, மருத்துவர்கள் தான் பயின்ற மருத்துவமுறையை
மட்டுமே பின்பற்றி சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், தான் படிக்காத - பயிற்சி
பெறாத மருத்துவமுறைகளை பின்பற்றினால், அது தண்டனைக்குறிய குற்றம்
என்று தீர்ப்பளித்திருக்கின்றன.
எனவே, மத்திய அரசு இதுபோன்ற "கலவைமுறை" மருத்துவத்திட்டத்தை
உடனடியாகக் கைவிடவேண்டும், நவீன அறிவியல் மருத்துவம் மற்றும் இந்திய
மருத்துவ முறைகளின் தனித்துவத்தைப் பாதுகாத்து - போதிய நிதியளித்து,
ஊக்கப்படுத்தி - வளர்க்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அதிக
எண்ணிக்கையில் அரசு மருத்துவக்கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும்
உருவாக்கிட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை சிபிஐ (எம்) மாநிலக்குழு
வலியுறுத்துகிறது.