உதவித் தொகையை உயர்த்துக மாற்றுத்திறனாளி மாநாடு வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி,அக்.5- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ஆந்திரா அரசைப் போல் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கள்ளக்குறிச்சி ஒன்றியம் 2வது மாநாடு ஞாயிறன்று (அக்.5) நடைபெற்றது. ஒன்றிய தலைவர் எஸ்.செல்வம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், ஒன்றிய குழு உறுப்பினர் கே.சுதா கொடியேற்றினார். ஒன்றிய பொருளாளர் கே.அஞ்சலை வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் துவக்க உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் டி.மாயகிருஷ்ணன் அறிக்கை வாசித்தார். மாவட்டத் தலைவர் பி.வேலு, சிபிஎம் வட்டச் செயலாளர் வெ.ஏழுமலை வாழ்த்துரை நிகழ்த்தினர். மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம் நிறைவுரையாற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர் கே.செல்வம் நன்றி கூறினார். தீர்மானங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை, 4 மணி நேர வேலை, முழு ஊதியம் ரூ.336 வழங்க வேண்டும் என கோரப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை ஆந்திரா அரசைப் போல் ரூ.6,000 ஆகவும், கடும் ஊனமுள்ளவர்களுக்கு ரூ.10ஆயிரமாகவும், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாநாட்டில் 17 பேர் கொண்ட கள்ளக்குறிச்சி ஒன்றிய குழுவில் தலைவராக டி.கொளஞ்சி, செயலாளராக டி.மாயகிருஷ்ணன், பொருளாளராக கே.சுதா தேர்வு செய்யப்பட்டனர். 17 பேர் கொண்ட சங்கராபுரம் ஒன்றிய குழுவின் தலைவராக ஆர்.பரத், செயலாளராக கே.செல்வம், பொருளாளராக எஸ்.மீனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
