tamilnadu

img

ரயிலில் தவறி விழுந்து கர்ப்பிணிப் பெண் பலி

சென்னை, மே 3 - தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரு கே உள்ள மேல்நிலை நல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்த தம்பதி சுரேஷ் குமார் - கஸ்தூரி. இவர்களுக்கு திருமண மாகி 9 மாதங்கள் தான் ஆகிறது.

7 மாத கர்ப்பிணியான கஸ்தூரிக்கு வளைகாப்பு நிகழ்வை தங்களது சொந்த ஊரில் நடத்துவதற்காக உறவினர்களுடன் மே 2 அன்று இரவு சென்னை - கொல்லம் விரைவு ரயிலில் சென்றுள்ளனர். ரயில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்துள்ளது. ரயில் படிக்கட்டு பகுதிக்கு சென்று கதவு ஓரத்தில் வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு நிலை தடுமாறி ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

செயலிழந்த அபாயச் சங்கிலி
 கஸ்தூரி கீழே விழுந்தது கண்டு அலறிய உறவினர்கள், தங்கள் வந்த எஸ்.9 பெட்டியின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர்.அது செயல்பட வில்லை. அடுத்த பெட்டியின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயன்றுள்ளனர். அதற்குள்ளாக அந்த ரயில் சுமார் 8  கிலோ மீட்டர் தள்ளி நின்றுள்ளது. இதையடுத்து,  சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு, கஸ்தூரியை பிணமாக மீட்டனர். பின்னர், உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கஸ்தூரியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது. 

இதற்கிடையே, கஸ்தூரி இறந்தது குறித்து விசாரணை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.