tamilnadu

img

செய்திகள் தொடர்கின்றன - பழனி.சோ.முத்துமாணிக்கம்

இலக்கியத் தொலைக்காட்சியின் கலக்கல் செய்திகள்! வாசிப்பவர் பழனி.சோ.முத்துமாணிக்கம். அத்துவானக் காட்டில் அழுதுகொண்டிருக்கிறாள் நீதிதேவதை! அமைப்புச் சட்டப் புத்தகத்தைத்  தொலைத்து விட்டாளாம்; தேர்வு நேரத்தில்  புத்தகம் கிழித்த மாணவன்போலத்  தேம்பித் தேம்பி அழுகிறாள்; எழுதுகோலை மூடிவிட்டு வரலாற்று ஆசிரியர்கள் வாய்மூடி மவுனியாய்.. வழிபாட்டுக்குச் சென்றபோது தற்கொலை செய்துகொண்டார் காந்தி.! உப்புச் சத்தியாக்கிரகத் தொண்டர்கள் ‘அடிதாங்கும்’ போட்டியில் அசத்திக் காட்டினர்;

மண்டையில் இரத்தக் கோலத்துடன் விக்டோரியா அரசி விருது கொடுத்தார்.! துப்பாக்கி சுடும் போட்டியின்போது குறுக்கே சென்ற  கவுரிசங்கர், பன்சாரே, கல்புர்கி தாமாகக் குண்டு விழுங்கித் தடுக்கி விழுந்து மரித்துப் போனார்கள்! டில்லிக் குளிர் தடுக்க வீட்டில் மூட்டிய தீயில் தப்பிப் பிழைத்தார் காமராசர்!. ஜெனரல் டயரின் படை துப்பாக்கியைச் சுத்தம் செய்து விளையாடிய திடலில் இடையூறாக வந்த இந்தியர்கள் குண்டுகள் ஏந்தினர்! புளியம்பழம் பறிக்கப்போன கட்டபொம்மன் கழுத்தில் கட்டியிருந்த  கயிறு மாட்டியதால் கயத்தாற்றில் மூச்சுவிட மறந்தார்! செய்திகள் தொடர்கின்றன....  இந்த வெங்காயங்களை உரிக்கமுடியாது... இல்லை இல்லை ..மன்னிக்கவும் திருத்த முடியாது எனத் திரும்பிப் போனார்.!

வேள்விகளில் பலிகளைத் தடுத்து ஆடுமாடுகளோடு  கசாப்புக் கடைக்குப் போனார் கவுதம புத்தர்! ஆட்சிமாற்றத்தால்  அழுதுபுலம்பிய கம்பராமன் தன் பெயரைத் தொலைத்துவிட்டுச்  சரயு ஆற்றில் கரைந்து போனான். கங்கைக் கரையில் அனுமதி மறுக்கப்பட்ட அய்யன் வள்ளுவன் குறள்படும் பாட்டைக் கண்டு குமிறிக் குமிறிக் கண்ணீர் உகுத்தான்;  காவிக்கறை அச்சத்தில் தன் வெள்ளையாடையைக் காப்பாற்றத்  தனியறைக்குள் தாளிட்டுக்கொண்டு வள்ளலாரும் தீயைத்தழுவினார்!. இடைவேளைக்குப் பிறகு.... பொருளியல் செய்திகள் தொடர்கின்றன.. அணையைத் தூரெடுக்க ஆழநீர் மூழ்கிய விதர்பா உழவர்கள் வீங்கிச் செத்தார்கள்!. முட்டுவழிக்கும் கட்டுபடியாகாத உழவுத்தொழிலை ஓய்ப்பதற்கு வயல்களையெல்லாம் சாலைகளாக்கி வளம்சேர்த்தனர்; பசுமைப் புரட்சி!. ஆழ உழு என்பதைச் செயலில் காட்டி அய்ட்ரோகார்பன் தோண்டிக்காட்டினர் மீதேன் எரிவதில் பலர் வயிறுகள் எரிவதாய்  வதந்தி பரப்பினர் தேசத் துரோகிகள்! பொருளியல் அறிஞர்கள் பூரித்துப் போயினர், வானத்தைக் கிழித்து வளர்ந்தது நாடென! தப்பி ஓடிய கடனாளிகளிடம் வங்கியை ஒப்படைத்துவிட்டு வனவாசம் ஏகினர் வங்கி மேலாளர்கள்!

கணக்கில் வராத கறுப்புப் பணக்கட்டுக்குச் சிலர் கட்டுப்போட்டுக் கட்டுப் போட்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தினர்! வாழ்வியல் செய்திகள் தொடர்கின்றன.. பசுக்குண்டர்களுக்குப் பத்மபூசன் விருதும் கும்பல்கொலைகாரர்க்கு வீரசக்ராவும் பாலியல்வன்முறை வீரர்களுக்கு அர்ச்சுனா விருதுகளும்  அள்ளித் தரப்பட்டன.! ..வணிகச் செய்திகள் தொடர்கின்றன.. மகாராட்டிரத்தில் குதிரைவணிகம் எடுபடாமல் இறங்குமுகத்தில்! மலிவுவிலைக்கு மனிதரைத் தேடிக் குதிரைகள் தெருவில் அலையும் அவலம்! இந்திய நாட்டை ஏலம் எடுக்க உலகவணிகர்கள் போட்டாபோட்டி! சந்திரன்பரப்பில் மனைகள்விற்பனை! செவ்வாய்க்குச் சுற்றுலா சூரியனில் தொழிற்சாலைகள் கோள்களை இணைத்துச்  சாலைகள் போட ஒப்பந்தங்கள் உயிர்பெற்றன! காலமாற்றங்களைக் கணிக்கமுடியாமல் ஏழை இந்தியன்  வானத்தை நோக்கி வாய்பிழந்து நிற்கிறான்.! இத்துடன் செய்திகள்  முடிவடையவில்லை.. தொடர்ந்துகொண்டே......

;