tamilnadu

img

‘இழந்த வாழ்வும்-தேடும் வாழ்வும்’ - இலங்கை எம்.பி. மயில்வாகனம் திலகராஜா

குடியுரிமைப் போராட்டம் என்பது இந்தியாவில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இங்கு இலங்கைத் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள்; இதை எப்படி பொருத்திப் பார்ப்பது என்பது குறித்து, சென்னைக்கு வருகை தந்திருந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவிடம் கேட்டபோது,” நான் எழுதிய ‘மலைகளைப் பேச விடுங்கள்’ என்கின்ற எனது இரண்டாவது நூல் இதைப் பற்றித் தான் பேசுகிறது” என்றார். இலங்கைத் தமிழர்களை மூன்று நிலைகளாக பார்க்கிறோம் என்ற அவர், “ஒன்று,1964ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சீமா- சாஸ்திரி ஒப்பந்தம். இலங்கை அரசும் இந்திய அரசும் செய்துகொண்டது. அதாவது, 150 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சென்ற மக்களை அதிகாரப்பூர்வமாக இந்தியா திரும்ப பெற்றுக் கொண்ட தமிழர்கள் தமிழ்நாடு முழுமைக்கும் பரவலாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை பிரச்சனை கிடையாது. இந்த மக்கள் ‘சிலோன்காரர்கள்’ என அழைக்கப்படும் சொல்லாடலும் உண்டு. ஆனால், இந்த மக்களும் சட்டவிரோதமாக வந்தவர்கள் என மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது அபத்தமானது” என்றார்.
இந்திய தமிழனுக்கு அநீதி!
அவர் மேலும் சொல்கிறார்: வாழும் இடம் ஒருவருக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போன்று குடியுரிமை மிக மிக அவசியமானதாகும். மலையகத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனையே அங்கிருந்து தான் துவங்குகிறது. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒட்டுமொத்த தமிழகமும், ஏன், ஒட்டுமொத்த இந்தியாவும் இலங்கைத் தமிழர் குடியுரிமை விவகாரத்தை அவசியம் பேச வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் ‘ஒரு இந்தியனுக்கு இந்தியாவிலேயே குடியுரிமை’ மறுக்கப்படுகிறது என்கிற புரிதலை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து சர்வதேச ரீதியாக நமது நியாயத்தை முன்வைக்க வேண்டியுள்ளது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களை ‘ஈழத் தமிழர்கள்’ என்று அழைக்கிறார்கள். அப்படி ஒரு பதிவு எங்கேயும் கிடையாது. சட்ட ரீதியாக அவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான். அதேபோல், மலையக தமிழர்கள் என்றும் கிடையாது. சட்டரீதியாகவும் இல்லை. இந்திய தமிழர்கள் என்றுதான் பிறப்புச் சான்றும் வழங்கப்படுகிறது. இதில், மலையகத் தமிழர்களில் இந்தியாவில் வசித்து வரும் இரண்டாம் தலைமுறையினர் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதில், அங்கு குடியேறுவதில் பயம், உறவுமுறை என பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது.  ஆகவே, அகதிகள் முகாம்களில் இந்திய அடையாளத்துடனோ, இந்தியனாகவோ உள்ள அந்த 30 ஆயிரம் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். அல்லது ஓசிஐ என சொல்லப்படுகின்ற விசா நடைமுறை இந்தியாவில் உள்ளது. அதனை பெற்றுக் கொடுத்தால் குறைந்தபட்சம் அவர்கள் விரும்பினால் இலங்கையிலோ, விரும்பினால் இந்தியாவில் வாக்குரிமை இல்லாத பிரஜைகளாக்கினால் அவர்கள் வாழக்கூடிய அந்தஸ்து கிடைக்கும். எனவே, அந்த அடிப்படையில் இந்த பிரச்சனையை விரிவாக பேசி மாறுபட்ட தீர்வுகளை முழுமையான குடியுரிமை அல்லது விசா நடைமுறை மற்றும் இந்தியாவில் இருக்கக்கூடிய முறைகளில் எவ்வாறு? எப்படி? அவர்களுக்கான பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது தொடர்பாக ஒரு தீர்மானத்திற்கு வரலாம். குடியுரிமை என்பது ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கும் இந்த சூழ்நிலையில் குடியுரிமை சார்ந்து மதத்தையோ, இனத்தையோ அரசியல் கூறுபாடாக மாற்றுவது சரியானது அல்ல. உலகத்தில் எந்த மூலையில் எந்த மக்களுக்கு இன அடிப்படையிலோ அல்லது மதஅடைப்படையிலோ குடியுரிமை தீர்மானிக்கப்படும் என்றால் அது நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியது. கண்டிப்பதோடு நின்றுவிடாமல் அதற்குரிய மாற்றுவழிகளை கையாண்டு சரியான முறையில் அதனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற ஜனநாயக பண்புக்கு சகல தரப்பும் ஒன்றுபட வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்.                                                          பேசப்படாத வரலாறு
இலங்கையில் இனமும்-மதமும், இந்தியாவில் சாதியும்-மதமும் குடியுரிமை பெறுவதற்கு பிரச்சனையாக, தடையாக இருக்கின்றன. இந்த குடியுரிமை பிரச்சனையை இலங்கையில் எவ்வாறு அணுகினோம்? எப்படி இந்த வேரை அறுக்க முடிந்தது என்பதும் நீண்ட நெடிய வரலாறாகும். இந்தியாவில் குடியுரிமைக்கு மதம், நாடு ஒரு தடையாக இருக்கிறது. குடியுரிமை பெறுவது என்பதில் எங்களுடைய அனுபவத்தில் நிச்சயம் ஜெயிக்க முடிந்த விஷயம் தான். இந்தியாவில் எப்படி மதம் என்ற நிலையில் குடியுரிமை பிரச்சனை அணுகப்படுகிறதோ அதுபோல் இலங்கையில் இனம் என்ற நிலையில்தான் அணுகப்பட்டது. பிரித்தானியர் ஆண்ட இலங்கையில் எங்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. அது, பின் இலங்கையில் அதாவது, சுதேசி இலங்கையில் பறித்துக் கொள்ளப்பட்டது. அந்த குடியுரிமையை திரும்பப் பெறுகிற போராட்டம் தான் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் போராட்டமாக இருந்தது. இலங்கையில் நடைபெற்ற நாட்டுரிமை போராட்டம் என்றதும் அதை ‘தனி நாடு’ போராட்டமாக மட்டுமே பார்க்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அதில் உண்மை இல்லை. இலங்கையை ஒட்டு மொத்தமாக பாதுகாக்கும் போராட்டத்தை அங்கே தமிழர்கள் நடத்தியிருக்கிறார்கள் என்பது இதுவரை பேசப்படாத நிகழ்வாகும். இலங்கையின் பிரஜையாக மாறிக் கொள்வதற்கு நாங்கள் நடத்திய போராட்டம் 50 ஆண்டுகால வரலாறாகும்.