tamilnadu

img

மலைமுழுங்கி மகாதேவனின் விஸ்வரூபமும் விபரீதமும்

ஸ்ரீராமுலு

சமீபத்தில், தென்னிந்தியாவின் மாபெரும் தொழில் நகரமான கோவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, உக்கடம் வழியாக நான்கு சக்கர வாகனத்தில் பயணித்தோம். சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த பசுமை நிறைந்த மரங்கள், தென்னந்தோப்பு, ரம்யமான காற்றும் மனதுக்கு இதமாகிறது.  போரூர்-சிறுவாணி சாலை வழியாக ஆலந்துறையை கடந்ததும், இருட்டுப் பள்ளம் சந்திப்பு. அங்கிருந்து வலது புறம் திரும்பியதும் 8வது கிலோ மீட்டரில் வெள்ளியங்கிரி மலையை அடைந்தோம். அதன் அடிவாரம் பூண்டி கிரா மத்தில் தொடங்குகிறது. இங்கு பூண்டி ஆண்டவர், மனோன் மணி அம்மன் உள்ளிட்ட மூன்று சன்னதிகள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் எல்லையான இந்த மலை மிகவும் அடர்ந்த வனப் பகுதியாகும். இந்த மலைக்கு செல்லும் முன்பு இனிதே வரவேற்கிறது இடிக்கரை பேரூராட்சி.

திட்டம் போட்டு திருடும் கூட்டம்!
சுற்றுலா தலமான இந்த மலை அடிவாரத்திலிருந்து 6000 அடி உயரத்தில் கிரிவலம் எனப்படும் குகை கோவில் அமைந்துள்ளது. அங்கு செல்ல வேண்டும் என்றால் மிக மிக செங்குத்தான மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். கோவிலின் பின்புறம் வடக்கு பகுதியில் மலை மீது செல்வதற்கான படிகள் உள்ளன. இந்த மலையில் ஏறுவது என்பது அவ்வளவு சுலபமல்ல.  ஏழு மலைகளை தாண்டி வழிபட்டு வந்த பாரம்பரிய மிக்க பக்தர்களை, அடிவாரத்திலேயே பரவசத்தில் ஆழ்த்தி, பன்னாட்டு பக்தர்களின் நிதியை அள்ளும் திட்டத்துடன் காட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டது தான் ஈஷா அறக்கட்ட ளையின் தலைமையகம். இந்த இடம் நீலகிரி உயிர்க்கோள காப்பகம் (பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி) என்பது தனிக்கதை. பூண்டி கிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றதும் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜக்கி வாசுதேவின் யோகா மையத்திற்கு வழிகிறது. இந்த சாலையே வனத்துறைக்கு சொந்தமானது என்பதை எச்சரிக்கைப் பலகைகளில் அறிந்து கொள்ள முடிகிறது. வனத்தை ஒட்டிய போளுவம்பட்டியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு சிறிதளவு நிலத்தை வாங்கிய ஈஷா யோகா மையம், பல நூறு ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுள்ளது. ஆனால் கணக்கு காட்டுவது 150 ஏக்கர் மட்டுமே.

பிரமிப்பும் - அதிர்வலையும்!
மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோகா பயிற்சி மையம் மற்றும் தியானலிங்கம் (கருவறை) செல்லும் முன்பு உடைமைகள் (செல்போன், கை பைகள் உள்ளிட்ட) அனைத்தையும் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்த பிறகே வரவேற்கின்றனர். உள்ளே நுழைந்ததும் சாலை நெடுகிலும் சுற்றுச்சுவர், மின் வேலி, கம்பிகள், மெலோடி இசையில் ஸ்லோகங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. மற்றொருபுரத்தில் இயற்கையாக வளர்ந்த லட்சக்கணக் கான மரம், செடி, கொடிகள் அழிக்கப்பட்டு ‘பசுமை கரங்கள்’என்ற பெயரில் நடப்பட்ட மரக்கன்றுகள், ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்கள், புதிய புதிய கட்டுமானங்கள். மேலும், சிறிது தூரம் சென்றதும் முதன்மை அல்லது ஆதி நிலை என்று கூறப்படும் ஸ்பந்தா மண்டபம். அதன் அருகாமையில் கருவறை உட்புற லிங்க பைரவி, சத்குரு நடத்தும் பயிற்சிகள் மற்ற நிகழ்வுகள் நடக்கும் இரண்டு பெரிய அரங்குகள். இதற்கிடையில், தியானலிங்கம் மண்டபம். இது தரை மட்டத்திலிருந்து 35 அடி ஆழத்தில் பிரம்மாண்ட வடிவில் பாம்பு படம் வரைந்து இருக்கும் இமாலய கால் சுவர். இவைகளை கடந்ததும் தூண்களே இல்லாமல் செங்கற்களை கொண்டு குவிந்த கூரையுடன் கூடிய ஒரு கட்டமைப்புடன் ஈஷாவின் புத்துணர்வு தியானலிங்கம்.  இயற்கையின் விலை மதிப்பற்ற குவியலாகத் திகழும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மூலிகை செடிகள், பறவைகள், அனைத்துண்ணி வகைகள், நன்னீர் மீன்கள் என்று பல்லுயிர் வாழ் நிலையின் கருவூலமாக விளங்கி வருவதை பாதுகாக்க வேண்டிய நிலையில், ஈஷாவின் பயிற்சி மையத்திலிருந்து பார்க்கும் போது கண்ணுக்கு எட்டிய தூரம் குடிசைகள் கிடையாது. பழங்குடி மக்கள் வசிப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. அடர்ந்த வனம், ஆங்காங்கே ஈஷாவின் கட்டடங்கள், கல்வி நிறுவனம், குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் மட்டுமே புலப்படுகின்றன. இவை அனைத்தும் விரட்டி அடிக்கப்பட்ட பழங்குடி மக்கள் நிலம் மற்றும் ஆக்கிரமிப்பு நிலம் என்பது சொல்லாமலே புரிகிறது!

நடைப்பிணமாக...!
அடுத்து, யோகா மையத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இளைஞிகள், இளைஞர்கள், பிரம்மச்சாரிகள், முழுநேர தன்னார்வ தொண்டர்கள், விருந்தினர்கள் என்று சொல்லிக் கொள்வோரின் உறைவிடமாக இருப்பதையும் காண முடிகிறது. அத்துடன், யோகா பயிற்சி மூலம் மன அமைதியை விரும்பும் இளைஞர்களுக்கு “நான் தான் கடவுள்” என மொட்டை அடித்து அடிமைகளாக மாற்றுகிறார். இவரது மாய வலையில் சிக்கிய எம்.டெக். படித்த கீதா, பி.டெக். முடித்த லதா ஆகிய இரண்டு மகள்களையும் மீட்டுத் தாருங்கள் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கதறிய வேளாண்மை பல்கலைக்கழக அதிகாரி காமராஜ்-சத்தியஜோதி தம்பதியரின் புகார் கண்முன் நிற்கிறது! அதுமட்டுமல்ல, அவர் ஒரு ‘வாழும் குரு’, ‘புனிதர்’, ‘யோகா குரு’ என்றெல்லாம் கூறிக் கொள்வதுடன் மூளைச்சலவை, தீட்சை, சன்னியாசம் செய்து மொட்டைத் தலைகளுடன் காவி, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் உடைகள் அணிந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இளைஞர்களும், இளைஞிகளும் ஏதோ நேர்ந்துவிடப் பட்ட பலி ஆடுகளை போல மந்திரம் சொல்லிக்கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த நிகழ்வுகள், சேது திரைப்படத்தில் காட்டப் படும் ஏர்வாடி போன்ற தனியார் மனநல காப்பகங்களை கண் முன் நிறுத்துகிறது. செல்போன் உள்பட எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை என்றாலும் நம் கேமராவின் கண்கள் பதிவு செய்து கொண்டன. இந்த யோகா மையம், காட்டுப் பகுதிகளையும், யானைகள் செல்லும் வழித் தடங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது என்று பல ஆண்டுகளாகவே பரவலாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இன்னும்பிற அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும், இதனை ஈஷா யோகா மையம் தொடர்ந்து மறுத்தே வருகிறது. இந்த சர்ச்சைகளை புறம் தள்ளிய ஜக்கி வாசுதேவ், தனது யோகா மையத்திற்கு அருகாமையில் 112 அடி உயரத்தில் 500 டன் எடை கொண்ட ஆதியோகி (சிவன்) சிலையை நிறுவினார். திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்து வந்து நானும் பணக்கார சாமியார் என்று தம்பட்டம் அடித்து கொண்டார். அங்கும் ஒரு விசிட் அடித்தோம்.  யோகா மையம், சிவன் சிலை அமைந்திருக்கும் பகுதிகளில் நமது கண்களுக்கு எட்டிய தூரத்திற்கும் பல நூறு ஏக்கர் வளைத்து போடப்பட்டுள்ள வன நிலத்தில் “save soil” என்கிற போர்வையில் ஒரு பக்கம் இயற்கை விவசாயம், மறுபக்கத்தில் ஆங்காங்கே கட்டுமான பணிகளையும் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

சட்டத்தை வளைத்தல், புதிதாக ஏற்படுத்துதல்
வன நிலம் ஆக்கிரமிப்பு குறித்த சிஏஜி அறிக்கை ஆட்சி, மாற்றத்திற்குப்பிறகு விஸ்வரூபம் எடுத்தது. ஈஷா யோகா மையம் குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் குற்றச்சாட்டு மேலும் புயலை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக, வனப்பகுதியில் கட்டுமானப் பணிகளை துவக்கிய போது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டை பெற தவறியதாக ஈஷா அறக்கட்டளை மீது தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அரசின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்திற்கு ஓடினார் ஜக்கி வாசுதேவ். இந்த வழக்கின் விசாரணையில், “கல்வியை ஊக்குவிக்கும் நிறுவனம் என்ற அடிப்படையில் ஈஷா அறக்கட்டளை விலக்கு கோரலாம் என்று வினோதமான விளக்கமளித்த ஒன்றிய பாஜக அரசு, ஈஷா அறக்கட்டளை 2006ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை கோவை மாவட்டத்தில் அதன் வளாகத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் தனது விசுவாசத்தை காட்டியது”. அப்போது குறுக்கிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி,“கல்வி நிறுவனங்கள் என்ன சட்டத்திற்கு மேலானவையா? என்று கேள்வியை எழுப்பினார். சில மாதங்களுக்கு பிறகு, திடீரென தனது நிலையை மாற்றிக் கொண்ட உயர்நீதிமன்றம்,“கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படாவிட்டால் கொடைக்கானல் இண்டர்நேஷனல் பள்ளி, டூன் பள்ளி போன்ற புகழ் பெற்ற நிறுவனங்கள் இருக்காது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கல்வி கற்க வாய்ப்பே இருக்காது” என்றும் பின்வாங்கியது. இந்த சூழ்நிலையில் காலச்சக்கரத்தை சற்று பின்நோக்கி சுழற்றும்போது, கோவை மாவட்ட வன அதிகாரி ஒருவர் வனத்துறையின் தலைமை அலுவலருக்கு எழுதிய கடிதத்தில், “ஈஷாவின் யோகா மையம் உள்ள பகுதி யானைகள் வழித்தடம் என்று 17.8.2012 தெளிவாக சுட்டிக்காட்டிய தும், ஈஷா மையம் அமைத்த மின் வேலிகளில் சிக்கும் யானைகள் அதன் அதிர்வுகளால் பாதை குழம்பி வயல் வெளிகளுக்கு சென்று விடுகின்றன என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது.

இந்த நிலையில்தான், வனப்பகுதியில் ஈஷா அறக்கட்டளை எவ்வித ஆகிரமிப்பு செய்யவில்லை. வன நிலத்தில் ஈஷாவின் கட்டடங்கள் எதுவும் இல்லை. கோவை வனப்பகுதியில் வரையறுக்கப்பட்ட யானை வழித்தடம் என்பதும் கிடையாது. யானை வழித்தடத்தை ஈஷா மறித்தது என்றும் சொல்ல முடியாது என்றும் தகவல் உரிமை பெறும் சட்டத்தில் தற்போது அரசு அதிகாரி தெரிவித்திருப்பது பேரதிர்ச்சி. அது மட்டுமல்ல, ஏன் இந்த முரண்பாடு? இடையில் நடந்தது என்ன? எதற்கு இந்த பல்டி? என்கிற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்குக் காரணம், தமிழகத்திலுள்ள மலைகளை பாதுகாப்பதற் காக அமைக்கப்பட்டுள்ள மலைதல பாதுகாப்புக் குழுமத்திடம் அனுமதி பெறாமல் சுமார் 4,27,700 சதுர அடிக்கு வனப்பகுதியில் கட்டடங்களை கட்டிய ஈஷா மையம், 29 லட்சம் சதுர அடியில் மேலும் கட்டுமானங்களை மேற்கொள்ள விண்ணப்பமும் செய்தது. இதற்கு அனுமதி மறுத்தது மட்டுமின்றி புதிய கட்டுமானங்கள் அனைத்தையும் நிறுத்தவும் உள்ளூர் திட்ட குழுமம் நோட்டீஸ் அனுப்பியது. சிறிது காலம் பதுங்கிய ஜக்கி யோகா மையம், அன்றைய ஆளும் கட்சியான அதிமுகவை கவனிக்க வேண்டியதை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தது. அடுத்த கணமே, “மலைப்பகுதியில் நிலம் வாங்கியவர்கள் அந்தப் பகுதியில் வீட்டுமனை வியாபாரம் செய்யவும் கட்டடங்கள் எழுப்புவதற்கும் 30.3.2020 இல் ஈஷாவின் யோகா மையத்திற்கு ஆதரவாக புதிய சட்ட விதிகள் கொண்டு வந்தனர். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது”.

மனரீதியான துன்புறுத்தல்
 ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் ஈஷா புத்துணர்ச்சி மையமும் ஈஷா ஹோம் ஸ்கூலும் இருக்கிறது. இந்த ஸ்கூல் தங்கும் வசதியுடன் கூடிய ஒரு பள்ளி. இங்கு மாணவர்களும் ஆசிரியர்களும் தங்குவதற்கு காப்பகமும் உள்ளது. இதில் படிக்கும் குழந்தைகள் வகுப்புகள் முடிந்து காப்பகத்திற்கு செல்லும் பொழுது எந்த சலனமும் இல்லாமல் அக்கம் பக்கம் கூட திரும்பிப்பார்க்காமல் வரிசையாக செல்வதை பார்த்ததும் இங்கு படிக்கும் குழந்தைகள் மனரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். குடும்ப உறவுகளை துறந்து பிரம்மச்சாரியாக மாறுவதற்கு போதை கலந்த ஊக்க மருந்து, நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கிறார்கள். குழந்தைகளை பார்க்கச் செல்லும் பெற்றோரை கூட செல்லமாக கொஞ்ச முடியாமல் பலரும் நடைப்பிணங்களாக மாறிவிடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டையும்புறம் தள்ளவிட முடியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் லட்ச ரூபாயைக் கொட்டி ஈஷா அறக்கட்டளை யால் நடத்தப்படும் பள்ளியில் தனது இரண்டு மகன்களையும் சேர்த்த மதுரையைச் சேர்ந்த உளவுத்துறை காவலர், ஒருவர் சிறிது காலத்திற்குப் பிறகு நடைப்பிணமாக மீட்டு மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு வேறொரு பள்ளியில் சேர்த்து திரும்பவும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்த அனுபவத்தை ஒதுக்கி விட முடியாது. ஈஷா வித்யா என்று அழைக்கப்படும் இந்த கல்வி நிறுவனம் மலை, காடுகளில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கும் சமவெளியில் வசித்துவரும் பட்டியல் இன குழந்தைகளுக்கும் இலவச கல்வி கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது அல்ல. ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களுக்கு சமஸ்கிருத குருகுல கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

இதில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் மிகவும் வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஈஷா யோகா பயிற்சி மையம், அறக்கட்டளை, கல்வி நிறுவனங்கள் காடுகளை அழித்து வன உயிரினங்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது. யானைகளின் இடமாக இருந்த காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் எழுப்பி வருகிறது. பழங்குடியின மக்களின் வாழ்வாதார விவசாய நிலங்களை பறித்துக் கொண்டு விரட்டி அடித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பரிவார கூட்டத்தின் ‘இந்துத்துவா’ நிகழ்ச்சி நிரலுடன் அனைவருக்கும் யோகா என்கிற மாய வலையை விரித்து அதில் சிக்கும் ஆண் பெண் இருபாலர் மட்டுமல்ல சமூகத்துக்கும் பெரும் சீரழிவை உருவாக்கிக் கொண்டு வருகிறது. இவை அனைத்தையும் மூடி மறைத்து ஆட்சியாளர்களையும் நீதிமன்றங்களையும் தங்கள் கைக்குள் போட்டுக்கொள்ளவே சமூக நலத் திட்டங்கள், பசுமைக் கரங்கள், காவிரி கூக்குரல், மர விவசாயம், விஷம் இல்லா விவசாயம், உழவன் உற்பத்தி நிலையம், கிராம புத்துணர்வு இயக்கம் உள்ளிட்டவை புலி வேடமிட்டு உலா வரும் ஜக்கி வாசுதேவின் அட்டூழியங்களுக்கு மாநில அரசும் முதலமைச்சரும் முடிவு கட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரது விருப்பமாகும்.

;