tamilnadu

img

ஆங்கில ஆட்சி எதிர்ப்புப் போராட்டமும் அந்தமான் தீவு சிறைத் தண்டனையும் - பி.ராமமூர்த்தி

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே விடுதலைப் போராட்டத்திலும் சாதி ஒழிப்பு சமூக நீதி போராட்டத்திலும் முன்னின்றவர். நாட்டு மக்கள் அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறவும், அனைத்து வகைச் சுரண்டல்களிலிருந்தும் விடுதலை பெறவும், தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். பகத்சிங்கின் அமைப்பிலும் தொழிற்சங்கங்களிலும் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் செயல்பட்ட சிறந்த தலைவர். இந்திய சுதந்திரத்தின் பொன்விழா சமயத்தில் அவரால் எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி.

ஒவ்வொரு நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட் இயக்கமும், வரலாற்றில் வேறெந்த அரசியல் இயக்கமும் சந்தித்திராத அவதூறு, நிந்தனை, சொல்லொணா ஒடுக்குமுறைகள், சித்ரவதைகளுக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களும், தீவிர ஊழியர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் தங்கள் இன்னுயிரை, கட்சிக்காக மகிழ்வுடன் அர்ப்பணித்தனர். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 1917ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஷ்யப்புரட்சி முடிவுற்று, ஒரு சில வருடங்கள் வரையில், இந்தியாவில், மார்க்சியக் கருத்துக்கள் குறித்து, முற்றிலும் அறியப்படாமலே இருந்தது. அன்றிருந்த ஆங்கிலேயே காலனி ஆதிக்க அரசாங்கமானது, மார்க்சிய நூல்கள் இந்தியாவிற்குள் வருவதைக் கடல் சுங்கச் சட்டத்தின் கீழ் தடை செய்தது. ‘கருத்துக்களை ஒரு பொழுதும் தடை செய்ய முடியாது. அவைகள் சுங்கம் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பார்வையிலிருந்து தப்பிப் பயணம் செய்வதற்கான வழியை எப்படியோ கண்டுபிடித்து விடுகின்றன என்று 1928ஆம் ஆண்டில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துகையில் பண்டிட் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டார்.

1920ஆம் வருடங்களின் ஆரம்பத்தில், தாஷ்கண்டிலிருந்து கீழ்த்திசை நாடுகளின் பல்கலைக்கழகத்தில் கலந்து கொண்டு இந்தியாவிற்குத் திரும்பிய சிலருக்கெதிராக முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு போடப்பட்டது. அவர்களுக்கு நீண்டகாலச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், 1925ஆம் ஆண்டுவாக்கில், சிதறிக்கிடந்த கம்யூனிஸ்ட் குழுக்களும், தனிநபர்களும் ஒன்று சேர்ந்து, இந்திய மண்ணில் முதல் கட்சி மாநாட்டை நடத்தினர். அவ்வாண்டு, டிசம்பர் மாதத்தில், சிங்காரவேலு செட்டியார் தலைமையில் முதல் மாநாடு கான்பூர் நகரில் நடைபெற்றது. சிங்காரவேலு செட்டியார், தமிழகத்தின் பிரபல காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராவார்.

இந்த முதல் மாநாட்டுக்குப் பின் கம்யூனிஸ்டுகள், தொழிலாளி வர்க்கத்திடையேயும், அமைப்பு ரீதியாக அணிதிரட்டப்பட்ட வெகுஜன தொழிற்சங்கங்களிலும் தீவிரமாகப் பணிபுரிய ஆரம்பித்தனர். கம்யூனிஸ்டுகளின் தலைமையில் கீழ் பெரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன. பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளிகள் நடத்திய போராட்டமும், வங்காளத்து சணல் ஆலைத் தொழிலாளிகள் நடத்திய போராட்டமும், தென்னிந்திய ரயில்வே (எஸ்.ஐ.ஆர்) மற்றும் இந்திய தீபகற்ப ரயில்வே நடத்திய போராட்டமும் வரலாற்றுப் பிரசித்திபெற்றவையாகும். இத்தகைய தொழில்களில் மிகப்பெரும்பான்மையானவை. ஆங்கிலேய நிறுவனங்களுக்குச் சொந்தமாயிருந்த நிலையில் இத்தகைய போராட்டங்கள், ஆங்கிலேய - எதிர்ப்புப் போராட்டத்தின் பகுதியாக விளங்கின. ஆங்கிலேய அரசாங்கம் இந்தப் போராட்டங்களைக் கண்டு பயங் கொள்ள ஆரம்பித்தது. “தேசிய பாதுகாப்பு மசோதா” என்ற பெயரைக் கொண்ட ஒரு மசோதாவை இயற்றியது. இந்தச் சட்டத்தின் கீழ், குற்றப்பத்திரிகை கொடுக்காமல் யாரையும் விசாரணையின்றி காவலில் வைக்க முடியும். 

நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகளும், பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களும், இதன் கீழ் கைது செய்யப்பட்டு அந்தமான் தீவிற்குக் கொண்டு போகப்பட்டு போர்டபிளேயர் என்ற இடத்திலுள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின், நடைபெற்றது மீரத் சதிவழக்கு. மிகப் பிரபலமான, செயலூக்கமுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களும், தொழிற்சங்க இயக்கத்தைச் சேர்ந்த சிலரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தனர். அந்தச் சமயத்தில் ‘சுயராஜ்யக் கட்சி’ என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ்காரர்கள், இத்தகைய ஒடுக்குமுறைகளை முழுக்க முழுக்க எதிர்த்தனர் என்பதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம். அதைப் போலவே, முஸ்லிம் தலைவர்களும் மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரும், இதைக்கண்டித்தனர். அவர்கள் எதிர்ப்பு முழுவதும் மத்திய சட்டசபையில் பேசுவதோடு நின்றுவிட்டது. சட்டசபைக்கு வெளியே, நாட்டில் எவ்வித எதிர்ப்புப் பிரச்சாரமும் செய்யப்படவில்லை. மீரத் சதிவழக்கு மூன்று வருடங்கள் நீடித்தது. இறுதியில், பலர் நீண்டகால சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டனர்.

தென்னிந்திய ரயில்வே சதி வழக்கில், அதில் சம்பந்தப்படுத்தப்பட்ட சிங்காரவேலு செட்டியாருக்கு, திருச்சி செஷன்ஸ் நீதிபதி 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். அப்பொழுது சிங்காரவேலு செட்டியாருக்கு 50 வயதிற்கும் அதிகம். எனினும், சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் காரணமாக, அவருடைய தண்டனை வெகுவாகக் குறைக்கப்பட்டது. மீரத் சதிவழக்கிலும், இதர வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்த இத்தகைய தோழர்கள் விடுதலை செய்யப்பட்டு கட்சியின் வேலையைத் துவக்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாவே, கட்சி,  சட்ட விரோதமானதென்று பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தத்தடை, 1942ஆம் ஆண்டு முதல் பாதிவரை நீடித்தது. எனினும், கட்சி சட்ட விரோதமாகச் செயல்பட ஆரம்பித்தது.

;