பாஜக ஆளும் ராஜஸ்தானில் அடுத்த ஆண்டில் இருந்து ப்ரி-கே.ஜி, எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழிப் பாடம் கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில சமஸ்கிருத கல்வித்துறை ஆணையர் பிரியங்கா ஜோத்வட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில சமஸ்கிருத கல்வித்துறை ஆணையர் பிரியங்கா ஜோத்வட் கூறுகையில், "சமஸ்கிருதம் கட்டாயமாக்குவது தொடர்பான பரிந்துரையை இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே ஒன்றிய அரசுக்கு அனுப்பினோம்.
அடுத்த ஆண்டில் இருந்து எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழிப் பாடம் கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான பாடத்திட்டம், புத்தகம் ஆகியவை தயாரிக்கப்பட்டுவிட்டன. அமைச்சரவையில் இருந்து ஒப்புதல் வழங்கிவிட்டால் பாடத்தை தொடங்கிவிடுவோம்." என்றார்.
ராஜஸ்தான் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்த சமஸ்கிருத புத்தகங்களுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்சிஇஆர்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒரு மாதத்தில் 757 மழலையர் சமஸ்கிருத பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக உள்ளது.