states

img

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைச் சம்பவம் குற்றப்பத்திரிகையில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் பெயர் சேர்ப்பு

லக்னோ,ஜன.3- லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது  காரை ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த ஆண்டு தில்லி மாநில எல்லைகளை முற்றுகையிட்டும் மற்றும் நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த  போராட்டத்தால் ஆளும் பாஜகவினர் மிகுந்த ஆத்திரமடைந்து, போராடும் விவ சாயிகளை  சிறுமைப்படுத்தி, பொய்க்குற்றச் சாட்டுகளை அள்ளிவீசினர்.

இதற்கு விவ சாயிகள் தகுந்த பதிலடி கொடுத்தனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரப்பிர தேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவ சாயிகள் பேரணியாகச் சென்றனர்.  அப்போது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதில்  4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.  இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது.  இந்த வழக்கில் நியாயமான விசார ணை நடைபெற ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் உத்தரப்பிரதேச காவல்துறை ஒன்றிய அமைச்சர் மிஸ்ரா மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவர்களை கைது செய்வதில் மெத்தனம் காட்டியது. இதற்கு உச்சநீதிமன்றம் யோகி அரசை கடுமையாக சாடியதுடன், இதுகுறித்து விசாரணை குழு அமைத்தும் உத்தர விட்டதுடன்,  குற்றவாளிகளை கைது செய்யவும் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்தே உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரை உச்சநீதிமன்றம் நியமித்தது.மேலும் 3 மூத்த காவல்துறை அதிகாரிகளையும் சிறப்பு புலனாய்வுக் குழுவுடன் சேர்த்தது.

இதனையடுத்து,லக்கிம்பூர் கெரி விவசாயிகளின் பேரணி யில்  கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும்,மாறாக எதார்த்தமாக நடந்தவை அல்ல என்றும் இதனை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு அம்பலப்படுத்தியது. ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் உட்பட கைது செய்யப்பட்ட 13 பேர் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும் இக்குழு உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது.

இந்த வழக்கில்  கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை விசாரணைக் குழு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான காலக்கெடு இன்றுடன் (செவ்வாய்) முடிவடைகிறது. விசாரணைக் குழுவால் 1800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளதாகத் கூறப்பட்டது. ஆனால் 5000 பக்க குற்றப்பத்திரிகையை எஸ்ஐடி (சிறப்பு குற்றப்புலனாய்வுத்துறை) திங்கள்கிழமை மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  அதில், விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவ இடத்தில் ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்துள்ளார் என்று கூறி அவரது பெயர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்றிய இணை அமைச்சரின் உறவினராக கருதப்படக்கூடிய வீரேந்தர் சுக்லா என்பவரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நடவடிக்கை பாஜகவுக்கு அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.