states

img

குடியிருப்புகளின் சாதிப்பெயர்களை நீக்க மகாராஷ்டிர அரசு முடிவு

"​மகாராஷ்டிரத்தில் சாதிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களை நீக்க அம்மாநில அரசு  முடிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு ஜாதி அடிப்படையிலான பெயர்கள் இடப்பட்டுள்ளன.  உதாரணமாக, மகர் வாடா, புத்த வாடா, மங்க் வாடா, தோர் வாட, பிராமண் வாடா, மாலி கலி என பல பெயர்கள் உள்ளன.   முன்பு  இந்த பகுதிகளில் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் வசித்ததால் இந்த பெயர்கள் இடப்பட்டுள்ளன.  தற்போதைய கால மாற்றத்தில் அனைத்து சாதியினரும் இந்த இடங்களில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில்  புதன்கிழமை நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்ரே தலைமை வகித்தார். கூட்டத்தில் மகாராஷ்டிராவில் சாதி பெயர் கொண்ட குடியிருப்புகளின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி மகாராஷ்டிர முதல்வர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “முன்பு ஜாதிவாரியாக ஒவ்வொரு பகுதியில் அந்தந்த இனத்தவர் வசித்து வந்தனர்.   ஆனால் தற்போது நிலை மாறி உள்ளது.  மகாராஷ்டிரா போன்ற முன்னேறி வரும் மாநிலங்களில் இது போன்ற ஜாதி அடிப்படையிலான குடியிருப்பு பெயர்கள் பொருத்தமல்ல 
பல குடியிருப்புகளின் பெயர்கள் தலித்துகள், புத்த மத தலித்துகள், இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துவோர், தோட்டக்காரர்கள் என உள்ளன.    எனவே இந்த பகுதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், ஷாகுன் நகர், கிரந்தி நகர் என பெயரிடப்பட உள்ளன.” என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சமுகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, “இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். நாங்கள் சாதி அமைப்பை படிப்படியாக ஒழிக்க விரும்புகிறோம். இங்கு அனைவருக்கும் மரியாதையுடன் வாழ உரிமை உள்ளது.யாரையும் ஜாதி அல்லது மதத்தை வைத்து குறைத்து மதிப்பிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசின் இந்த முடிவை  சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். 
 

;