2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான பாஜக முன்னாள் எம்.பி ப்ரக்யா தாகூர், லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித் உட்பட 7 பேரை இன்று விடுவித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் உள்ள பள்ளிவாசல் அருகே நின்றுக்கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்து வந்தது. லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித், பாஜக நிர்வாகி பிரக்யா தாக்கூர், ஓய்வுபெற்ற மேஜர் ரமேஷ் உபத்யாய, அஜய் ரஹிர்கார், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னி ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் (UAPA) மற்றும் இந்திய தண்டனை சட்டம் (IPC) கீழ் வழக்குப் பதியப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.
2016ஆம் ஆண்டு என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பிரக்யா தாக்கூர் மற்றும் ஷ்யாம் ஷபூ, பிரவீன் தகல்கி, ஷிவ்நாராயண் கல்சங்ரா ஆகியோருக்கு எதிராக எந்த சாட்சியங்களும் இல்லை என்றும், அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும் ஷபூ, தகல்கி, கல்சங்ரா ஆகியோரை விடுவித்த என்ஐஏ நீதிமன்றம், பிரக்யா தாக்கூரை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டது.
இந்த சூழலில், இவ்வழக்கில் குற்றவாளிகளான பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித் உட்பட 7 பேரை இன்று விடுவித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் மகாராஷ்டிரா அரசு தரப்பு உறுதியான மற்றும் நம்பகமான ஆதாரங்களை வழங்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.