தில்லிக்கு வரும் விவசாயிகளை, தில்லிக்குள் நுழைய அனுமதிக்க்க்கூடாது என்று உத்தரப்பிரதேசம், ஹர்யானா எல்லைகளில் கடுமையான முறையில் காவல்துறையினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், கண்ணீர்புகைக் குண்டுகள் மற்றும் வாட்டன் கேன்ன்கள் மூலமாக குளிர்நீரை பீய்ச்சி அடித்தபோதிலும் எதற்கும் கலங்காது, துணிச்சலுடன் முன்னேறிய விவசாயிகளை எதுவும் செய்ய இயலாமல் கடைசியில் மத்திய பாஜக அரசு அவர்களைத் தில்லிக்குள் விடுவதற்கும், போராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் கூடிட அனுமதித்தும் உள்ளது.
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து தில்லி எல்லையில் இன்று(வெள்ளி)காலை வந்த சேர்ந்தனர். இவர்களைத் தில்லிக்குள் நுழையக்கூடாது என்று ஆர்எஸ்எஸ்-பாஜக அரசாங்கம் வாட்டர் கேனன்கள் மூலமாக குளிர்ந்தநீரை இவர்கள் மீது பீய்ச்சி அடித்தபோதிலும், கண்ணீர்ப் புகைக்குண்டுகள் மூலம் சுட்டபோதிலும் அவற்றைத் துச்சமெனத் தூக்கிஎறிந்து விவசாயிகள் முன்னேறினர். விவசாயிகள் வாகனங்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கமே சாலைகளில் பள்ளம் தோண்டி வைத்திருந்த்து. உண்மையில் இதன்மூலம் அரசாங்கம்தான் வீழ்ந்துள்ளது என்று ஓர் ஊடகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹர்யானா விவசாயிகள் ஏற்கனவே பஞ்சாப் விவசாயிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர். லட்சக்கணக்கான அளவில் அவர்கள் தில்லியை நோக்கி வரத்தொடங்கினர். இதேபோன்று உத்தரப்பிரதேசத்திலிருந்தும் இதர மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் வந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் ஹாபூரிலும், தில்லி-மொராதாபாத் நெடுஞ்சாலையில் பகர்பூர் சுங்கச்சாவடியிலும் மற்றும் முசாபர்நகர், சம்பால், ராம்பூர் ஆகிய இடங்களிலும் தில்லிக்கு வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மத்திய அரசின் கட்டளைக்கிணங்க, பாஜக மாநில அரசாங்கங்கள் இவ்வாறு விவசாயிகளைத் தடுத்து நிறுத்தியதை பல்வேறு அமைப்புகள் கடுமையாகக் கண்டித்தன. அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. தில்லி வரும் விவசாயிகளை அனுமதித்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டது.
இன்று (வெள்ளி) காலை பல தொழிற்சங்கங்கள், மாணவர், மாதர் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் சார்பில் நாடாளுமன்ற வீதியில் விவசாயிகளை தில்லிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இவற்றின் பின்னணியில் மத்திய அரசு, விவசாயிகளை தில்லிக்குள் வருவதற்கு இறுதியாக அனுமதித்துள்ளது. நிரங்காரி மைதானத்தில் அவர்கள் அணிதிரண்டுகொண்டிருக்கிறார்கள்.
(ந.நி.)