பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக இதுவரை 52 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பீகார் மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து உயிரிழந்தவர்கள் 18.66 லட்சம் பேரும், தொகுதி மாறியவர்கள் 26.01 லட்சம் பேரும், ஒன்றுக்கும் மேற்பட் இடங்களில் பதிவு செய்துள்ள வாக்காளர்கள் 7.5 லட்சம் பேரும் என 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கூடுதலாக 11,484 வாக்காளர்கள் கண்டுபிடிக்க முடியாதவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது பீகார் வாக்காளர்களில் சுமார் 6.62 சதவீதமாகும்.
ஜூன் 24 ஆம் தேதி நிலவரப்படி, பீகாரில் மொத்தம் 7.89 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்ததாகவும், 90.67 சதவீதம் (7.16 கோடி) வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை (EF) சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த படிவங்களில் 90.37 சதவீதம் (7.13 கோடி) டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.