அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசண்ட் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான பிரச்சனையில் ஓமன் நாட்டின் முன்னெடுப்பில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய உடன்பாடு எட்டப்பட்ட, அடுத்த 24 மணி நேரத்திற்குள், எவ்வித முன்னறிவிப்பு மின்றி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது குண்டுகளை வீசி 170க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றன. இந்த தாக்குதலில், காமேனி உட்பட ஈரானின் 40-க்கும் மேற்பட்ட உயர்மட்ட ராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. ஈரான், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜோர்டான் , பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும், ஆக்கிரமிக்கப் பட்ட பாலஸ்தீன நிலங்களின் மையப்பகுதி யில் உள்ள ராணுவ மறைவிடங்களையும் குறிவைத்துத் தாக்கியது. அமெரிக்கா - இஸ்ரேலின் இந்த போர் வெறியால், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசண்ட் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஈரான் முழுவதும் இதுவரை 131 நகரங்களில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
