tamilnadu

img

விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு - மார்க்சிஸ்ட் கட்சி தலையீட்டால் நிவாரணம்

கோவையில் மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் நிலையத்தில் மோட்டார் பழுதுபார்க்கும் பணியின்போது, எதிர்பாராதவிதமாகத் தொட்டிக்குள் விழுந்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் சாலை அவிநாசிலிங்கம் கல்லூரி அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 40 அடி ஆழமுள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் தேக்கத் தொட்டி உள்ளது. இதில் ஏற்பட்ட மோட்டார் வால்வு பழுதினைச் சரிசெய்யும் பணியில், சிவானந்தா காலனியைச் சேர்ந்த அர்ஜுன் குமார் (38) மற்றும் பாப்பம்பட்டி பிரிவைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் சுரேஷ் (40) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

பணியின்போது எதிர்பாராதவிதமாக அர்ஜுன் குமார் நிலைதடுமாறி 40 அடி ஆழத் தொட்டிக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற சுரேஷ் குமாரும் நிலைதடுமாறி உள்ளே விழுந்துள்ளார். தொட்டிக்குள் இருந்த அடர்வான விஷவாயு தாக்கியதில் இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த சாய்பாபா காலனி காவல்துறையினர் மற்றும் கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொட்டி முழுவதுமாக கழிவுநீர் நிரம்பி இருந்ததால் உடல்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகமும் தீயணைப்புத் துறையும் இணைந்து சுமார் 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இருவரின் உடல்களையும் மீட்டனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன.

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டதே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் சி. வெண்மணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் த. நாகராஜ், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் கே. ரத்தனகுமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.30 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்; கவனக்குறைவாகச் செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கும் தலா 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கோவை மாநகராட்சி அதிகாரிகள் வழங்கினர். மேலும், இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை துணை ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.