states

img

கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகளை உறுதியாக தவிர்த்திட வேண்டும்

ஹைதராபாத், ஜூலை 7 - கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடு களை உறுதியாக தவிர்த்திட வேண்டும் என்று யுஜிசிக்கு  உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக முனைவர் பட்டம் ஆய்வாளர் ரோஹித் வெமுலா, மற்றும் மும்பையில் உள்ள டோபி வாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு  மருத்துவ மாணவரான  பாயல்  தத்வி  ஆகியோர் சாதி அடிப்படையிலான பாகு பாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் பெற்றோர் தொடுத்த வழக்கை நீதிபதி ஏ‌.எஸ்.போபண்ணா தலைமை யிலான அமர்வு விசாரித்தது. சாதி ரீதியான பாகுபாடுகளை உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக்கொண்டு அதிகாரிகள் எதிர்காலத்தில் எந்த பெற்றோரும் இத்தகைய இழப்பை சந்திக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அந்த அமர்வு கூறியது.வழக்கு  நடவடிக்கையின் போக்கை வெளிப்படுத்தும் போது மனுதாரர்களுடன் கலந்தாலோசிக்கும் அணுகுமுறையை யுஜிசி கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ்,பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மாணவர்களை பிரதான நீரோட்டத்திற்குள் கொண்டு வர யுஜிசி யின் திட்டம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.மேலும் இச்சமூகம் சார்ந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் பன்மடங்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்  உட்பட, மாணவர்களிடமிருந்து புகார்களைப் பெறவும் பதிலளிக்கவும் ‘சம வாய்ப்பை’ உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரினர். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அகற்று வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC), “பன்முகத்தன்மை மற்றும் உறுதி யான செயல் கொள்கையை ஒரு தனி அளவு கோளாக வழங்க  வேண்டும், இதன் மூலம்  பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் இணக்க மான சூழ்நிலையை உருவாக்க பல்கலைக் கழகங்களை ஊக்குவிக்க வேண்டும்” என்று மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுள்ளனர். கல்வி வளாகத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாடு பரவலாக உள்ளது என பேராசிரியர் சுக்தியோ தோரட் தலைமையிலான குழுவின் அறிக்கையையும் அந்த மனுவில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.