நீதித்துறையில் பாலின சமத்துவம் இல்லை
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் குற்றச்சாட்டு
புதுதில்லி நீதிபதிகளை பரிந்துரை செய்யும் உச்சநீதி மன்ற கொலிஜியம் அமைப்பில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், ஜே.கே.மகேஸ்வரி (ஆண்), நாகரத்னா ஆகிய 5 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உச்சநீதிமன்ற கொலிஜியம் அமைப்பு ஆகஸ்ட் 25 அன்று மும்பை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்சநீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஒன்றிய அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதி பதிகளாக அலோக் ஆராதே, விபுல் மனுபாய் பஞ்சோலி பதவியேற்றனர். இதன்மூலம் உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கப்பட்ட பதவி வரம்பான 34 நீதிபதிகள் எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்நிலையில், நீதித்துறையில் பாலின சமத்துவம் இல்லை என உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள் ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 34 நீதிபதிகளில் 33 பேர் ஆண் நீதிபதிகள் என்ற நிலையில் ஒருவர் மட்டுமே பெண் நீதிபதி ஆவார். அவர் உச்சநீதிமன்ற கொலிஜியம் அமைப்பில் உள்ள நாகரத்னா மட்டுமே. பெண் நீதிபதிக ளின் பிரதிநிதித்துவம் நீதித்துறையில் மிகக் குறைவாக உள்ளது. இது மிகுந்த கவலை அளிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற நியமனங்களில் பெண் நீதிபதிகள் யாரும் பதவி உயர்வு பெறவில்லை. நீதித்துறை நியமனங்களில் பெண்களின் விகிதாச்சார பிரதி நிதித்துவத்தை கொலிஜியம் உறுதி செய்ய வேண்டும்” என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கு எதிராக குவியும் கண்டனம் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் செயல்பாடு நீண்ட காலமாக சந்தேகத்தால் சூழப்பட்டுள் ளது. அதன் வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் தெளிவற்ற முடிவெடுக்கும் செயல் முறை குறித்து அடிக்கடி விமர்சனங்கள் எழுகின்றன. இந்நிலையில், விபுல் பஞ்சோலி நியம னத்தால் உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அகில இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகள் சீனியாரிட்டி பட்டியலில் 57ஆவது இடத்தில் உள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி யேற்ற விபுல் பஞ்சோலி. இவருக்கு முன் பெண் நீதிபதிகள், பல மூத்த நீதிபதிகள் உட்பட 56 பேர் உள்ளனர். ஆனால் மூத்த நீதிபதிகளை புறக்கணித்து விபுல் பஞ்சோலி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது கடும் சர்ச்சை மற்றும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. கொலி ஜியத்தின் பரிந்துரைகள் சீனியாரிட்டியால் கறாராக வழி நடத்தப்படுவதில்லை. மாறாக பொதுமக்க ளுக்கு வெளியிடப்படாத பிற கருத்தாய்வுக ளால் வழிநடத்தப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என சட்ட வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குஜராத் நபரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக்க திட்டமா?
உச்சநீதிமன்றத்தின் ஒரே பெண் நீதிபதியான நாகரத்னா கொலிஜியம் பரிந்துரை கூட்டத்தில் நீதிபதி விபுல் பஞ்சோலியின் பதவி உயர்வு பரிந்துரையை ஏற்க மறுத்துள்ளார். இதனால் கொலிஜியம் 4-1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் பஞ்சோ லியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக கொலிஜியம் ஆலோசனையில் நீதிபதி நாகரத்னா கூறுகையில்,”நீதிபதி பஞ்சோலியை பரிந்துரைப்பது கொலிஜியம் அமைப்பு மீதான நம்பகத்தன்மையை சிதைத்து விடும். பஞ்சோலி குஜராத் உயர்நீதிமன்றத்தில் இருந்து பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு வழக்க மான முறையில் மாற்றப்படவில்லை. ரகசியமாக பஞ்சோலி பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். எனவே அவரது நியமனம் சரியல்ல. குஜராத் உயர்நீதிமன்றம் ஏற்கனவே நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் என்.வி.அஞ்சாரியா மூலம் உச்சநீதிமன்றத்தில் நல்ல பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது. அதனால் நீதிபதி பஞ்சோலியின் பதவி உயர்வு சமநிலையின்மையை உருவாக்கக்கூடும். அதே நேரத்தில் மற்ற உயர்நீதிமன்றங்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கும். வரும் காலங்களில், அதாவது அக்டோபர் 2031 முதல் மே 2033 வரை இந்தியாவின் தலைமை நீதிபதி யாக நீதிபதி பஞ்சோலி பதவியேற்கும் சூழல் கூட உருவாகும்” என அவர் கூறியுள்ளார். இதன்மூலம் குஜராத் நபரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆக்கவே பஞ்சோலியை சீனியாரிட்டி இல்லாமல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாரா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.