states

img

வாஜ்பாயின் கெடு முயற்சியும் நரேந்திர மோடியின் நடிப்பும் - அரசியல் சட்டத்தை மாற்றும் பிரச்சனை

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்று எதிர்க் கட்சிகள் குறை கூறுகின்றன என்று “வருத்தப்பட்டி ருக்கிறார்” நரேந்திர மோடி. எதிர்க்கட்சிகள் ஏன் பாஜக மீது குறை கூறுகின் றன? நெருப்பில்லாமல் புகையுமா? அப்படியா னால் அடுப்பு மூட்டியவர்கள் யார்? எதிர்க்கட்சி யினரா? இல்லையே, பாஜகவினர் தானே! அயோத்தி பாஜக எம்.பி., லல்லு சிங் என்பவர் அண்மையில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொ துக்கூட்டத்தில் பேசும் போது, “அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் பாஜகவுக்கு மக்களவையில் 3-இல் 2- பங்கு பெரும்பான்மை தேவை” என்று கூறியிருக்கிறார். இதற்கு முன்பும் ஏற்கெனவே இரண்டு பாஜக நிர்வாகிகள் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது குறித்துப் பேசியுள்ளனர் என்று தினமணி நாளி தழ் (17.4.2024) செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் சட்டத்தை மாற்ற 3இல் 2 பங்கு பெரும்பான்மை வேண்டும் என்பதும்  பாஜக 400 இடங்களில் ஜெயிக்கும் என்று கூறுவதும் வேறு வேறு தானா? தொடர்பில்லாதவையா?

ஆர்எஸ்எஸ்-சின் கொள்கைதானே

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் - அமைப்பால் நீண்டகால மாக சொல்லப்பட்டு வருவது தானே! பாஜகவும் பல காலங்களிலும் கூறி வந்திருப்பது தானே! ஆனால் எதுவுமே அறியாத அப்பாவி போல எதிர்க்கட்சிகளை வசைபாடுகிறார் மோடி. அது மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுவதாகவும் பழி போடுகிறார். இந்திய அரச மைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதே அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தான்,பாஜகவின் முன்னோடித் தலைவர்கள். இந்த நாட்டின் சட்டமாக மனுஸ்மிருதி தான் இருக்க வேண்டும்; இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்தவர்கள் அவர்கள்.  ஆர்எஸ்எஸ்-சின் வழிகாட்டுதலின் படி ஆட்சி நடத்தும் பாஜக வாய்ப்புக் கிடைக்கும் போதெல் லாம், அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு முயற் சிக்கும். அத்தகைய முயற்சி அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்தபோது துவங்கியது. அதற்காக 2000-இல் ஒரு தேசிய கமிஷ னையும் அமைப்பதாக வாஜ்பாய் அறிவித்தார். முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்க டாச்சலய்யா தலைமையிலான அந்த கமிஷனில் அனில் திவான், ஃபாலி நாரிமன் எம்.பி., சட்ட கமிஷன் தலைவர் பி.பி.ஜீவன் ரெட்டி, முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஆகியோர் இடம் பெறலாம் என்றும் செய்தி வெளியானது.

கே.ஆர்.நாராயணனின் எச்சரிக்கை

இந்திய குடியரசின் 50 ஆம் ஆண்டு சமயத்தில் வாஜ்பாய் அரசினால் எடுக்கப்பட்ட இந்த கெடு முயற்சிக்கு அப்போது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்களும் இதற்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். எச்சரிக்கை செய்தார். நமது அரசாங்க (ஜனநாயக) அமைப்பில் மிக வும் கடினமான (சர்வாதிகார) அமைப்பில் இருப்ப தைப் போல அதிக இறுக்கத்தை தவிர்க்க வேண் ண்டுமென்று கே.ஆர்.நாராயணன் மிக நாசுக்காக அந்த முயற்சியை கண்டித்தார். அதாவது ஜனாதி பதி ஆட்சி முறை இந்தியாவுக்கு தேவையில்லை என்றார். இதையடுத்து அந்த முயற்சி அப்போ தைக்கு கைவிடப்பட்டது. ஆயினும் அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், கடந்த 50 ஆண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் அரசியல் சட்டத் தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று பரிசீலிக்கவே இந்த குழு அமைக்கப்படவிருக் கிறது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி 22 கட்சிகளின் கூட்டணியாக இருந்தது. அப்போதே, தனிநபர் அதிகாரம் மிகுந்த, ஜனாதி பதி ஆட்சி முறையைக் கொண்டு வரவேண்டும் என்று பாஜகவும் ஆர்எஸ்எஸ் - பரிவாரங்களும் பேசின. வாஜ்பாய் முதலில் 13 நாட்கள் பிரதமராகவும் இரண்டாவது முறை 13 மாதங்கள் பிரதமராகவும் இருந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தி ருந்தார். இதனால் அவரது பிரபலத்தைப் பயன் படுத்தி ஆர்எஸ்எஸ் விரும்பிய ஒரு நபர் எதேச்சதி கார - ஜனாதிபதி முறையை - சர்வாதிகார முறையை கொண்டுவர செய்யப்பட்ட அந்த முயற்சி அப்போ தைக்கு வெற்றிபெறவில்லை.

திசை திருப்பலும் பழி போடலும்

அதனால் இப்போது பெரும்பான்மை பலம் உள்ள பாஜக ஆட்சியில், 370ஆவது பிரிவு ரத்து - பொதுசிவில் சட்டம் - ராமர்கோவில் என ஆர்எஸ் எஸ் விரும்பிய கெட்ட காரியங்கள் நடத்தப்பட்டு விட்ட பின்னணியில் தான், அரசமைப்புச் சட் டத்தை மாற்றுவது என்கிற பிரச்சனை மீண்டும் பாஜகவினரால் திட்டமிட்டுக் கிளப்பப்படுகிறது. ஆனால் இந்த பிரச்சனை நாடு முழுவதும் பாஜ கவுக்கு எதிராகத் திரும்பும் என்பதால், அதையே மிகவும் சாதுர்யமாக எதிர்க்கட்சிகள் மீது திருப்பி விடுகிறார் நரேந்திர மோடி. காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் அரச மைப்புச் சட்டத்தை வைத்தும் அரசியல் நடத்தத் துணிந்துவிட்டன என்று பழிபோடுவது மட்டு மல்லாமல் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் அக்கட்சிகளுக்கு தண்டனை அளிப்ப தாக இந்தத் தேர்தல் இருக்கும் என்று திசை திருப்பி அரசியல் லாபம் பெற நினைக்கிறார். அதற்காக மிகவும் தேர்ந்த நடிகராக வேறொரு குரலில் பேசு கிறார். பாஜக கூட்டணி அரசமைப்புச் சட்டத்தை மிகவும் மதிக்கிறது என்றும் அதனை இயற்றிய அம்பேத்கர் இப்போது வந்தால் கூட அதை மாற்ற முடியாது என்றும் பீகார் மாநிலம் கயாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏப்ரல் 16 அன்று பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி, என் போன்ற வர்கள் இன்று இருக்கும் நிலைக்கு (பிரதமர் பதவி க்கு) வந்ததற்கு அரசியல் சட்டமே காரணம். அதற்காக அம்பேத்கர் அளித்த அரசியல் சட்டத்துக்கு கட மைப்பட்டுள்ளேன் என்று மறுநாள் பாட்னாவில் பேசும் போது மோடி கூறியிருக்கிறார்.

எவ்வளவு நாள் தான் நல்லவராகவே நடிக்க முடியும்?

பாஜக - ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வேலை யே எதிர்க்கருத்து உள்ளவர்களையும் புகழ்வது போல் புகழ்ந்து பின்னர் சமயம் பார்த்து காலி செய் வது தானே. அதுவரை அவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதால் கொஞ்சம் நல்லவர்கள் போல் நடிப்பது சகஜம்தான். ஆனால் எவ்வளவு நாட்கள் தான் நல்லவர்களாகவே நடிக்க முடியும் அவர்களது இயல்பான குணம் அவ்வப்போது தலைதூக்கிவிடுமே! அண்மையில் மோடி ஒரு தனியார் ஊடகத்து க்கு பேட்டியளித்த போது ஒரு கேள்வி கேட்கப் பட்டது. ஒரு காலத்தில் இந்திரா தான் இந்தியா, இந்தி யா தான் இந்திரா என்று கூறப்பட்டது போல இப் போது  மோடி என்றால் இந்தியா, இந்தியா என்றால் மோடி என்று சொல்லப்படுகிறதே என்று ஊடகம் சார்பில் கேட்கப்படுகிறது. அதற்கு மோடி மிகவும் சங்கோஜப்பட்டு, “பாரதத்தை எனது தாயாகக் கரு துகிறேன். ஒரு மகனாக பாரத தாய்க்கு சேவை யாற்றி வருகிறேன். இது தான் உண்மை” என்று “மிகுந்த அடக்கத்தோடு” பதில் கூறியிருக்கிறார். மிகச் சாதுர்யமாக இந்தியா என்று கூறுவதை தவிர்த்திருக்கிறார். தாய் - மகன் என்று சமாளித்தி ருக்கிறார். ஆனால் உண்மை என்ன?

யாருக்கு கடமைப்பட்டிருக்கிறார்?

2014-இல் நாடாளுமன்ற படிக்கட்டுகளில் ஏறிய போது அதை தொட்டுக் கும்பிட்டு, நான் மக்க ளின் சேவகன் என்று கூறினார். ஆனால் அந்த நாடாளுமன்ற  கட்டடத்தையே புறக்கணித்துவிட்டு புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டினார். தான் யாருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளதாகக் கூறி னாரோ அந்த அம்பேத்கரின் படம் அங்கு வைக்கப் படவில்லை. அங்கு ஆர்எஸ்எஸ் - யாரை வழி காட்டியாக நினைக்கிறதோ அந்த சாணக்கியரே பிரம்மாண்டமாக வரையப்பட்டிருக்கிறார்.  அதுபோல் மக்களின் சேவகராகவா நடந்து கொண்டார் மோடி? காவிக் கூட்டத்திற்கு நெருக்க மான கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தானே  சேவகராக நடந்து கொண்டார். கொண்டிருக்கி றார்.அதனால் தானே அவர்கள் உலகப் பணக் காரர்கள் பட்டியலில் முதல் இருபது இடத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். அரசின் அனைத்து நிகழ்வுகளும் தன்னைச் சுற்றியே அமைந்திட வேண்டும் என்பதாலேயே, ராமர் கோவில் பூஜை நடத்தினார். இப்போது பாஜ கவின் தேர்தல் அறிக்கை கூட, “மோடியின் உத்தர வாதம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அமைச் சரவையின் சகாக்கள் பலரும் மோடியின் நாமா வளி பாடுகின்றனர். இத்தகைய தனிநபர் வழிபாடு தான், ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற ஆர்எஸ்எஸ்- சின் அடுத்த நகர்வுக்கு வழிகோலுகிறது. இது அவர்களது இந்துராஷ்டிரா -வுக்கு உகந்ததாக அமைந்திடும். அப்போது ஒரே நாடு ஒரே தலை வர் என்கிற சர்வாதிகார நிலையை நோக்கிச் சென்றி டும். அதுமட்டுமின்றி ஜனநாயகம், மதச்சார்பின் மை, சமத்துவம், கூட்டாட்சி போன்றவற்றை காலி செய்துவிட்டு மனுஸ்மிருதி அடிப்படையிலான பார பட்சமான, சமத்துவமற்ற சாதியப்பாகுபாடு கொண்ட வர்ணாசிரமம் போன்றவற்றை உள்ளடக்கிய இந்து ராஷ்டிரத்தை நிறுவுகிற வேலையைச் செய்திடும். இப்போது அவர்கள் கேட்கும் 400 இடங்களில் வெற்றி, அரசியல் சட்டத்தை மாற்றுவதற்கல்ல; தலைகீழாய்ப் புரட்டுவதற்காகத்தான். ஆனால் மோடியின் 10 ஆண்டுகால பாஜக ஆட்சி 144 கோடி மக்களுக்கும் பாதகமாகவே அமைந்தது. அதனால் பாஜகவுக்கு மக்கள் ‘144 - தடை’ போடு வார்கள். இந்தத் தேர்தலில், அதுவே ஜனநாய கத்தையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்கும். 

 - ப.முருகன்



 

;