states

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் அதானி ரொம்ப நல்லவராம்...

புதுதில்லி, பிப். 4 - அதானிக்கு கடன் வழங்கியதால் பிரச்சனையில்லை என்று கூறி, பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள் அதானியைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதேபோல இந்திய நிதிச் சந்தைகள் சிறப்பாகவே நிர்வகிக்கப்படுவதாகவும், முதலீட்டாளர்களுக்கு முன்பு இருந்த நம்பிக்கை இப்போதும் தொடரும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். “அதானி குழுமத்துக்கு ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வழங்கிய மொத்த கடன் ரூ. 27 ஆயிரம் கோடி. இது வங்கியின் கடன் புத்தகத்தில் வெறும் 0.88 சதவிகிதம் மட்டுமே ஆகும். அதானி துறைமுக நிறுவனம் முதல் நிலக்கரி நிறுவனம் வரை, பலவற்றுக்கு கடன் கடிதங்கள் மற்றும் வங்கி உத்தரவாதங்களின் செயல்பாடுகள் அடிப்படையிலேயே கடன் வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு கடனும் பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்களின் மூலம் வழங்கப்படவில்லை. கடன் வழங்குவதற்கான உறுதியான சொத்துகள் மற்றும் போதுமான பணப்புழக்கங்களை அதானி குழும திட்டங்கள் கொண்டுள்ளன. அத்துடன் கடனை திருப்பி செலுத்துவதில் சிறந்த வரலாறையும் கொண்டுள்ளன.

எனவே, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடனை திருப்பி பெறுவதில் ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’வுக்கு எந்தச் சிக்கலும் இல்லை” என்று அந்த வங்கியின் தலைவர் தினேஷ் காரா கூறியுள்ளார். “அதானி குழுமத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 மின் திட்டங்களுக்காக ரூ. 400 கோடி கடன் வழங்கப்பட்டது. தற்போது அது சுமார் ரூ. 250 கோடியாக உள்ளது. கடனுக்கான பணத்தை திருப்பி செலுத்துவது ஒழுங்காக நடைபெறுவதுடன், 2 மின் திட்டங்களும் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களுடன் செயல்படுகின்றன. அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை. மேலும், அதானி குழுமத்துக்கான எங்கள் கடன்கள் ஜம்மு-காஷ்மீர் வங்கியால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் சொத்துகளுக்கு மேல் பாதுகாக்கப்படுகின்றன” என ஜம்மு-காஷ்மீர் வங்கியின் துணைப் பொதுமேலாளர் நிஷிகாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், அதானி குழுமத்தின் நிறுவனங்களின் வீழ்ச்சி குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘நாட்டின் சந்தை நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. கவுதம் அதானியின் வணிகம் தொடர்பான சர்ச்சை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்பது எதிர்பாராதது. இந்தியா முற்றிலும் நன்கு நிர்வகிக்கப்படும் நாடாகவும், மிகவும் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சந்தையாகவும் உள்ளது. உலகளவில் அதிகம் பேசப்பட்ட ஒரு நிகழ்வு, இந்திய நிதிச் சந்தைகள் எவ்வளவு சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கும் என்று நான் நினைக்கிறேன். முதலீட்டாளர்களுக்கு முன்பு இருந்த நம்பிக்கை இப்போதும் தொடரும்’’ என அவர் சமாளித்துள்ளார்.

;